#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சென்னிமலை
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சென்னிமலை
82.#அருள்மிகு_சுப்ரமணியசுவாமி_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி)
அம்மன் : அமிர்த வல்லி, சுந்தர வல்லி
தல விருட்சம் : புளியமரம்
தீர்த்தம் : மாமாங்கம்
புராண பெயர் : புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி
ஊர் : சென்னிமலை
மாவட்டம் : ஈரோடு
ஸ்தல வரலாறு :
அனந்தன் என்ற நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அவர்களுக்குள் நடந்த சண்டையில், மேரு மலை உடைந்து பல பகுதிகளாக பிரிந்து பல இடங்களில் விழுந்தன. இதில் மலையின் சிகரப்பகுதி, பூந்துறை என்ற இடத்தில் விழுந்தது. அந்த இடமே சென்னிமலை. இந்த ஊருக்கு ‘சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி’ போன்ற பெயர்களும் உண்டு.
இந்த மலையின் ஒரு பகுதியில் நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம்.
பழமையான இக்கோவில், சிவாலயச் சோழர் என்ற மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். அம்மன்னன், ஒருபோது, நொய்யல் ஆற்றில் நீராடியபோது, இம்மலையை கண்டார். மலை மீது ஏறி, சிறிய கோவிலை தரிசித்தார். அப்போது, முருகப்பெருமானே, அர்ச்சகராக வந்து, தன்னைத்தானே பூஜித்து, மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கி அருளினார். சிவாலய சோழ மன்னர், திருக்கடவூரில் இருந்து தெய்வசிகாமணியார் எனும் திருமறையவரை, இவ்வூருக்கு அருகே, திருவிருந்தபுரத்தில் (பிடாரியூர்) குடியேற்றினார். இங்குள்ள சரவண முனிவர், சென்னிமலை வரலாற்றை அறிய விரும்பி, முருக கடவுளை வழிபட்ட சமயம், அசிரிரீ மூலம், முருகப்பெருமான் அருளியவாறு, காஞ்சிபுரம் சென்று, அங்கு வாழ்மறையவரிடம் செப்பேட்டில் இருந்து சிரகிரி வரலாற்றை, வேறு செப்பேட்டில் எழுதி கொண்டு வந்து, சென்னிமலையில் உள்ள செப்பேட்டில் உள்ளவாறு, மகிமைகள் அனைத்தையும் கண்டு மகிழ்ந்தார். முருகக்கடவுள், சரவணமுனிவருக்கு, ஆறுமுகத்துடனும், ஒரு முகத்துடனும் காட்சியருளினார். சரவண முனிவர் சமாதி, இம்மலை மேல் உள்ளது, குறிப்பிடத்தக்கது.
அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக இல்லாமல், பக்தர்கள் எளிதில் ஏறிச் செல்ல வசதியாக 1,320 படிக்கட்டுகள் அமையப் பெற்றிருக்கின்றன. அடிவாரத்தில் இருந்து சில படிகள் ஏறியதுமே கடம்பவனேஸ்வரர், கந்தர், இடும்பன் ஆகியோரின் சந்நிதிகளை ஒரே வரிசையில் தரிசிக்கலாம். பின்னர் தொடர்ந்து வள்ளியம்மன் பாதம் என்ற மண்டபத்தைக் கடந்து மேலே சென்றால், `முத்துக்குமார சாவான்’ என்னும் மலைக் காவலர் சந்நிதி அமைந்திருக்கிறது. அதற்கடுத்ததாக வரும் ஆற்றுமலை விநாயகர் சந்நிதியையும் தரிசித்துவிட்டு, மேலே சென்றால், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி எழுந்தருளியுள்ள திருக்கோயிலை அடையலாம்.
கிழக்கு நோக்கி உள்ள சென்னிமலை ஆண்டவர் சன்னதிக்கு முன்பாக விநாயகர் சன்னதியும், வலது பக்கத்தில் மார்க்கண்டேசுவரர் மற்றும் உமையவல்லி அம்மனும், இடது பக்கத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் சன்னதிகளும் அமையப்பெற்றுள்ளது. மூலவர் சன்னதிக்கு நேர் பின்புறமாக சென்றால் வள்ளி, தெய்வானை சன்னதியும் அமைந்துள்ளது.
கோயில் சிறப்புகள் :
•தண்டாயுதத்தை வலக்கரத்தில் ஏந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்து, பேரொளியும், பேரழகும், பெருங் கருணையுமாக அழகு தரிசனம் தருகிறார் முருகப்பெருமான்.
•சென்னிமலை தலத்தில், 2 முகங்கள் மற்றும் 8 கரங்களுடன் காட்சி தரும் முருகப் பெருமானை தரிசிக்கலாம். இந்தத் திருக்கோயிலின் தென் புறம்- வெளிப்புற மாடத்தில் உள்ள இவரை ஜாதவேத முருகன் என்பர். இது, யாகம் வளர்ப்பது போன்ற திருஉருவம் கொண்டது.
•மலையாண்டவர் கோயிலுக்கு மேற்கே மாமுருகனை அடைய தவமிருந்து மாலையிட்ட வள்ளி தெய்வானையின் ஆலயம் அமைந்துள்ளது. ஒருகல்லில் வடிவமைக்கப்பட்ட இவ்விருவரின் கற்சிலைக்கு நடுவில் கீழே ஒரு அற்புத லிங்கமும் இச்சிலையிலே இருக்கிறது.
•சிரகிரி என வழங்கப்படும் சென்னிமலை சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிராத்தனைச் சிறப்புமிக்க மலைக்கோயிலாகும்.
•ஸ்ரீஅருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளது. முருகப் பெருமானால் அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கப் பெற்றத்திருத்தலம்.
•தேவராய சுவாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய ‘கந்த சஷ்டி கவசம்’ என்ற முருகன் மீதான கவசத்தை அரங்கேற்ற முருகனை வேண்டியபோது முருகனே கனவில் தோன்றி சென்னிமலை தலத்திலே வந்து அரங்கேற்றம் செய்ய அருளினார். அதன்படி இந்த சென்னிமலை தலத்திலே ‘கந்த சஷ்டி கவசம்’ என்ற கவசமாலை அரங்கேற்றம் செய்யப்பட்டது.
•இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்த அற்புதம்.
•இடும்பனுக்கு, பொதிகைக்கு வழி அறியாத நிலையில், முருகப்பெருமான், ராஜகுமாரனாக காட்சியளித்து, பொதிகைக்கு வழிகாட்டிய இடமே புஷ்பகிரி எனும் சென்னிமலையாகும். இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலைதான், தற்போது பழனியம்பதியாக உள்ளது. இதனால், சென்னிமலையை, ஆதிபழனி என்பர்.
•இறைவன் கிருபையும், அருளையும் மறுத்துரைப்பவர்கள், பொய் சொல்பவர்கள் நாவானது புண் பொருந்திய நாக்கு’ எனக்கூறியவர் தன்னாச்சி அப்பன் சித்தர். 18 சித்தர்களில் ஒருவரான இவரை முனிவர் என்றும், புண் நாக்கு’ சித்தர் என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் புண்ணாக்குச் சித்தர்’ என்று பெயர் மருவியது. இவர், தனது நாக்கை பின்புறமாக மடித்து, அருள்வாக்கு சொல்லி வந்ததாலும், இவர் பின்நாக்கு சித்தர் என அழைக்கப்பட்டார். சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வாலயத்தில் இருந்து, சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து, யோக நிலையில் தவம் புரிந்தார்.
•சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் சிவசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த பின், அவருடைய சிலையை, தற்போதைய இடத்தில் நிறுவி, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில், இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது
•சென்னிமலை, மலைக்கோவிலில், 20 வகை தீர்த்தங்கள் உள்ளன. இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இமயன் தீர்த்தம், காசிபதீர்த்தம், பட்சி தீர்த்தம், நிருதிதீர்த்தம், சிவகங்கை காசிக்கிணறு, மாமங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர், வாலி விஷ்ணு தீர்த்தம், நெடுமால் சுனை, பிரம்ம தீர்த்தம், தேவர்பாழி, நவவீர தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், தெப்பக்குளம் முதலிய தீர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன. இத்தனை தீர்த்தங்கள் இருந்தாலும், சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு, மலை அடிவாரத்தில் இருந்து திருமஞ்சன தீர்த்தம், மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது
•எல்லா கோயில்களிலும் விநாயகருக்கு முதல் பூஜை உண்டு. இங்கோ மூலவர் முருகனுக்கு நைவேத்ய பூஜை முடிந்த பின்பே, சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும். முருகன் ஞானப்பழத்தால் கோபித்து வந்து மலைமேல் வீற்றிருப்பதால், அவரை சாந்தப்படுத்தும் வகையில் தொன்று தொட்டு இவ்வாறு நடக்கிறது.
•நோய் தீர்க்கும் வல்லமை கொண்ட மூலிகைகள், சென்னிமலையில் நிறைந்து காணப்படுகின்றன. வெண்சாரை, வெண்தவளை, கெயாத எட்டி, கரநொச்சி, கானாச்சுனை உள்ளிட்ட மூலிகைகள் இங்கு உள்ளன. உடற்பிணி நீங்குவதற்காக, சோழ அரசர் சிவாலயச் சோழன், பல தலங்கள் சென்று வழிபாடு நடத்தினார். நிறைவாக சென்னிமலை முருகப் பெருமானை வணங்கிய பிறகு நோய் நீங்கப் பெற்றதால், அவர் இந்த மலைக் கோயிலை அமைத்ததாக கூறப்படுகிறது.
திருவிழா :
சித்திரை முதல் பங்குனி முடிய இங்கு எப்போதும் திருவிழா நடைபெறும். தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது நடைபெறும் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாம் தரிசனம் செய்வது வழக்கம். அமாவாசை, சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,
சென்னிமலை – 638 051
ஈரோடு மாவட்டம்.
போன்:
+91-4294 – 250223,292263, 292595
அமைவிடம் :
ஈரோடு பழநி சாலையில் காங்கேயம் அடுத்து சென்னிமலை இருப்பதால் ஈரோடு பழநி, பேருந்து போக்குவரத்து வசதி அதிகம் உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : ஈரோடு 27 கி.மீ., காங்கேயம் 18 கி.மீ., திருப்பூர் 40 கி.மீ.,