#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஸ்ரீ வைகுண்டம்

April 12, 2023 0 Comments

மூலவர் : ஸ்ரீ வைகுண்டநாதர்
உற்சவர் : ஸ்ரீ கள்ளப்பிரான்
தாயார் : வைகுந்த நாயகி, சோரநாத நாயகி
தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
ஊர் : ஸ்ரீ வைகுண்டம்
மாவட்டம் : தூத்துக்குடி
ஸ்தல வரலாறு :
முற்காலத்தில் சத்யலோகத்தில் பிரம்மன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, கோமுகாசூரன் என்ற அரக்கன் அவரிடமிருந்து நான்கு வேதங்களையும் அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் இதனை அறிந்து வருந்தி, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு மஹாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய எண்ணி, தன் கையிலிருந்த தண்டத்தை ஒரு பிரம்மாச்சாரியாக மாற்றி ”பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் தவம் புரிய ஒரு இடத்தை பார்த்து வா” என்று அனுப்பி வைத்தார். அவனும் நதியின் இரு கரையிலும் பார்த்து விட்டு இறுதியாக திருக்கோளுருக்கு அருகில் உள்ள ஜெயந்திபுரிக்கு வந்தான். அங்கு ஒரு மோகினியைக் கண்டு மோகித்து அவளுடன் காலம் கழித்து நான்முகன் கட்டளையை மறந்தான். இதையறிந்த பிரம்மன் தன் கையிலிருந்த கெண்டியை ஓர் பெண்ணாக்கி “ பெண்ணே! தவம் இயற்ற தாமிரபரணி நதிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து வா” என்று அனுப்பி வைத்தார். அவளும் வெகு நாள் பூவுலகில் சுற்றி சோலைகள் நிறைந்த, தாமிரபரணி பாயும் இந்த திருவைகுண்டமே தவத்திற்குரிய சிறந்த இடம் என்று பிரம்மனிடம் தெரிவித்தாள்.
பிரம்மனும் இங்குவந்து கடும் தவம் செய்ய, திருமால் அதற்கு இரங்கி அவருக்கு நேரில் காட்சி கொடுத்து, கோமுகாசூரனை வதம்செய்து அவனிடமிருந்த நான்கு வேதங்களையும் மீட்டு பிரம்மனிடம் அளித்தார் பிரம்மன் அகம் மகிழ்ந்து, தனக்காக எப்படி வைகுண்டத்திலிருந்து இங்கு எழுந்தருளி சேவை சாதித்தீரோ, அவ்வண்ணமே இங்கு நித்யசேவை சாதித்து அடியவர்களுக்கு அருள்புரிய வேண்டும் என விண்ணப்பம் செய்ய பெருமாளும் இங்கு வைகுண்டநாதராக நித்யசேவை சாதிக்கிறார். இதனால் இத்திருப்பதியும் “திருவைகுண்டம்” என்றே சிறப்பிக்கப்படுகிறது.
கள்ளராக பெருமாள் திருவிளையாடல்:
முற்காலத்தில் திருவைகுண்டம் நகரில் காலதூசகன் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் பிறர் பொருளை திருடும் குணம் கொண்டவன் என்றாலும் பெருமாள் மீது பக்தி கொண்டவன். இவன் திருடச்செல்லும் முன், தான் திருடும்பொழுது யாருடைய கண்ணில் படாமலும் யாரிடமும் பிடிபடாலும் இருக்க வேண்டும் என்று திருவைகுண்டநாதரை வேண்டிக்கொள்வான். அதன்படி திருடிய பொருளில் பாதியை பெருமாள் சன்னதியில் சேர்த்துவிட்டு, மீதியிருப்பதை தன் நண்பர்களுக்கும் ஏழை, எளியவர்களுக்கும், கலைஞர்களுக்கும் என தர்மம் செய்துவந்தான். முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனாக திருவைகுண்ட தலத்தில் கலச தீர்த்தத்தில் நீராடி பெருமாளை தினமும் சேவித்து வாழ்ந்து வந்தான்.
இவ்வாறு இருக்க ஒரு நாள் நள்ளிரவில் மணப்படை அரண்மணையில் பெரும் பொக்கிஷங்களை கொள்ளையடித்து தப்பிவந்தான் காலதூசகன். ஆனால் இவனது சகாக்கள் அரண்மனை காவலாளிகளிடம் பிடிபட்டனர். இவர்களின் மூலம் விபரங்களைத் தெரிந்து கொண்ட அரசன் கால தூசகனை சிறைபிடித்து வர காவலாளிகளுக்கு உத்தரவிட்டான். இதை அறிந்த காலதூசகன் திருவைகுண்டநாதரை சரணடைந்து தம்மிடம் உள்ள பொக்கிஷங்களை கோவில் கைங்கரியத்திற்கே அர்ப்பணித்துவிடுவதாக வேண்டிக்கொண்டான். சரணடைபவர்களை காப்பதை தன் சங்கல்பமாகக் கொண்ட பெருமாள், காலதூசகனின் தூய பக்திக்கு செவி சாய்த்து, பெருமாளே காலதூசகன் வேடம்புனைந்து அரசவைக்குச் சென்றார். அரசரும் கள்வர் வேடத்திலிருந்தவரை நோக்கி திருடிய உம்மை பார்க்கும் பொழுது எனக்கு கருணையே ஏற்படுகிறது நீ யார்? எனக் கேட்டார். கள்ளராக வந்த பெருமாள் அரசரை நோக்கி, அரசரே உன் தவறை நீ உணரவில்லை அரசாங்கத்தின் செல்வங்கள் யாவும் உம்மாலும் உம்மை சுற்றியுள்ளவர்களாலும் வீணடிக்கப்படுகிறது. பணத்திற்கு நான்கு தாயாதிகள் (பங்காளிகள்) உண்டு. அதாவது தர்மம்,அரசன்,திருடன்,அக்னி ஆகியோராவர். இவர்களில் அரசன் என்பவன் தர்மத்தைக் கடைபிடித்து குடிமக்களைக் காக்கவேண்டும். நீவிர் அவ்வாறு செய்யத்தவறியதால் அதை உமக்கு உணர்த்தவே இத்திருவிளையாடலை நடத்தினோம் என்றும் நான் உலகைக் காக்கும் வைகுந்த பெருமாள் என்றும் கூறி அரசருக்கு காட்சியளித்து ஞானத்தையும் நல்ல புத்தியையும் எடுத்துரைத்தார். இவ்வாறு கள்ளனை காத்தருள் புரிந்ததால் திருவைகுண்டபதி, கள்ளபிரான் (சோரநாதன்) என்றும் அழைக்கப்பட்டார். இன்றும் இங்குள்ள உற்சவர் பெருமாள் “கள்ளர்பிரான்” என்றே அழைக்கப்படுகிறார்
கோயில் சிறப்புகள் :
• முன்னர் பிரம்மனால் பூஜிக்கப்பட்ட வைகுண்டநாதர் எழுந்தருளியிருந்த சிறிய கோவில், பிற்காலத்தில் சிதிலமடைந்து மண்ணுக்குள் புதைந்துவிட்டது. பிற்காலத்தில் இப்பகுதியை பாண்டியர்கள் ஆட்சி செய்த போது, தற்போது கோவில் உள்ஏ பகுதிகளில் அரண்மனைப் பசுக்கள் மேய்வது வழக்கம், இப்பசுக் கூட்டத்தில் ஒரு பசு வைகுண்டபதி புதையுண்ட இடத்திற்கு நேர் மேலே உள்ள துவாரத்தில் தினமும் தனது பாலைச் சொறிந்தது. இதைக் கண்ட பசு மேய்ப்பவர் அரசரிடம் தெரிவித்தார். அரசனும் தன் படை சூழ இங்கு வந்து பூமியை பயபக்தியுடன் தோண்ட, அங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் சாளக்கிராம மாலையணிந்து,சங்கு, சக்கரம் மற்றும் கதை தாங்கி அபயமுத்திரையுடன் காட்சி தந்தார். இதன் பின்னர் தான் பாண்டிய மன்னன் இத்திருக்கோவிலை பிரம்மாண்டமாக கட்டியதாக வரலாறு கூறுகிறது.
• கருவறையில் இந்திரவிமானத்தின் கீழ் ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற கோலத்தில், சங்கு, சக்கரம், கதை ஆகியவை ஏந்தியபடி, அபயமுத்திரை காட்டி கிழக்கு முகமாக காட்சியளிக்கிறார். இவருக்கு தினமும் இங்கு பாலால் திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்பம்சம் ஆகும்.
• இங்கு ஸ்ரீ தேவியின் அம்சமான பெரியபிராட்டியாய் நான்கு கரங்கள் கொண்டு, அமர்ந்த கோலத்தில் காட்சித்தருகிறாள் வைகுந்தநாயகி தாயார். இவளுக்கு பெருமாளின் வலப்புறம் தனிசன்னதி அமையப்பெற்றுள்ளது.
• இங்கு பூ தேவியின் அம்சமான பூமிபிராட்டியாய் நான்கு கரங்கள் கொண்டு, அமர்ந்த கோலத்தில் காட்சித்தருகிறாள் சோரநாதநாயகி தாயார். இவளுக்கு பெருமாளின் இடப்புறம் தனிசன்னதி அமையப்பெற்றுள்ளது.
• பெருமாள் சன்னதியின் முன்மண்டபத்தில் வடக்கு நோக்கியபடி ஒரு சன்னதியில் பழைய கருடவாகனம் உள்ளது. மிகவும் பழைமையான இக்கருடனுக்கு சந்தனம் பூசி காப்பு செய்துள்ளார்கள். இவரை இங்கு தரிசிப்பது சிறப்பு.
• இந்த தலத்தை நம்மாழ்வார் திருவாய்மொழியின் 3571 மற்றும் 3575 ஆகிய பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
• சித்திரை விழாவின்போது, நம்மாழ்வார் அவரது பிறந்த தலமான ஆழ்வார் திருநகரியிலிருந்து, அத்தலத்து பெருமாள் பொலிந்துநின்றபிரானுடன் இங்கு எழுந்தருளுவார். சுவாமியை மங்களாசாசனம் செய்தபின், அன்ன வாகனத்தில் எழுந்தருளுவார். அவ்வேளையில் கள்ளபிரான், பொலிந்துநின்றபிரான், வரகுணமங்கை வெற்றிருக்கை பெருமாள், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் ஆகிய நால்வரும் கருட சேவை சாதிப்பர்.
• இங்கு சித்திரை மாதம் ஆறாம் நாளிலும், ஐப்பசி மாதம் ஆறாம் நாளிலும், கருவறையிலுள்ள வைகுண்டநாதர் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுவது சிறப்பம்சம்.
• மற்ற திருக்கோவில்களில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கும் பெருமாள், இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க நின்றகோலத்தில் காட்சியளிப்பது சிறப்பு.
• கி.பி.1801ம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட போது இத்திருக்கோயிலை கோட்டையாக பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
• அக்காலத்தில் இத்தென்பாண்டி நாட்டின் வைணவ தலங்கள் அனைத்தும், இத்திருவைகுண்டம் கோவிலை மையமாக வைத்தே நிர்வகிக்கப்பட்டுள்ளது.
• விஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவபெருமானுக்குரியது கயிலாயம். பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க, இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர். இத்தலத்தில் சுவாமியே, வைகுண்டநாதராக அருளுவதால், இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் கிடைப்பதாக நம்பிக்கை. தவிர, இந்த ஊரிலேயே கயிலாசநாதர் கோயிலும் உள்ளது. இந்தக் கோயிலில் வேண்டிக்கொள்பவர்களுக்கு கயிலாயத்தில் இடம் கிடைக்கும். இவ்வாறு, ஒரே ஊரில் வைகுண்டம், கயிலாயம் என இரண்டையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.
• வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வர். இவ்வேளையில் சன்னதியை அடைத்துவிடுவர். பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடை திறந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒருசில மணித்துளிகளுக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடும். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் பிறப்பில்லா நிலை கிடைப்பதாக நம்பிக்கை.
• நம்மாழ்வார் தனது பாசுரத்தில், புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.”பசியாக இருக்கும் ஒருவர் சமையல் முடியும்வரையில், படுத்திருந்து காத்திருப்பார். பசி கூடும்போது, ஆர்வத்தில் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் முடிய இன்னும் தாமதமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். இதைப்போலவே, நம்மாழ்வாருக்கு அருள வந்த பெருமாள், அவர் பக்தியில் உயர் நிலை அடையும் வரையில் முதலில் புளியங்குடியில் கிடந்தும் (படுத்த கோலம்), பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இத்தலத்தில் நின்றும் காட்சி தருகிறார்,” என வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப்பெருமான், நம்மாழ்வாரின் பாசுரத்திற்கு விளக்கம் சொல்லியுள்ளார்.
• தை முதல் நாளில் கள்ளபிரானுக்கு, 108 போர்வைகள் அணிவித்து பூஜிப்பர். பின், அவர் கொடிமரத்தைச் சுற்றி வருவார். அதன்பின், ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தைக் கலைப்பர். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும், இந்நாளில் கள்ளபிரான் வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.
• பிரம்மன் தனது கெண்டியால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ததாலும், நதிக்கரையில் கலசத்தை நிறுவி பூசித்ததாலும், இங்கு தாமிரபரணி “ கலச தீர்த்தம்” என்று சிறப்புப்பெற்றது.
திருவிழாக்கள்:
வைகாசி மாத கருட சேவையில், ஒன்பது திருப்பதி உற்சவ மூர்த்திகளும் கருட வாகனத்தில் எழுந்தருள்வது வழக்கம். நம்மாழ்வாரின் உற்சவர் சிலை, அன்ன வாகனத்தில் ஒவ்வொரு திருப்பதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்த தலங்கள் குறித்து நம்மாழ்வார் பாடிய பாடல்கள் பாடப்படும்.
தை மாத தெப்பத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். தை முதல் நாளில் உற்சவருக்கு 108 போர்வைகள் அணிவிக்கப்படும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில்,
ஸ்ரீ வைகுண்டம் – 628601,
தூத்துக்குடி மாவட்டம்.
போன்:
+91 4630 256 476
அமைவிடம்:
திருநெல்வேலி மாநகரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 24-கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவைகுண்டம். திருநெல்வேலி புதியபேருந்துநிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் திருவைகுண்டம் வழியாக செல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 10 =