#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருத்தங்கல்

March 31, 2023 0 Comments

மூலவர் : நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்)
தாயார் : செங்கமலத்தாயார்(கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி)
தீர்த்தம் : பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி
புராண பெயர் : திருத்தங்கல்
ஊர் : திருத்தங்கல்
மாவட்டம் : விருதுநகர்
திருப்பாற்கடலில் பகவான் நாராயணன் சயனித்திருந்தார் அப்போது அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகியோர் இடையே தங்களில் யார் உயர்ந்தவர் என்ற பேச்சு எழுந்தது. அப்போது ஸ்ரீதேவியின் தோழிகள், “ஸ்ரீதேவி அதிர்ஷ்ட தேவதை. மகாலட்சுமி. அவள் பெயரை முன்வைத்தே பெருமாள் ஸ்ரீநிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் என்று அழைக்கப்படுகிறார். இவளையே பெருமாள் தன் மார்பில் தாங்குகிறார். தேவேந்திரன் இவளால் பலம் பெறுகிறார், வேதங்கள் ஸ்ரீதேவியை திருமகள் என்று போற்றுகின்றன” என்றனர். உடனே பூமாதேவியின் தோழிகள், “இந்த உலகுக்கு ஆதாரமாக விளங்கும் பூமாதேவி மிகவும் சாந்தமானவள். பொறுமையின் சிகரம். பொறுமைசாலிகளை வெல்வது கடினம். இவளைக் காப்பாற்றவே பெருமாள் வராக அவதாரம் எடுத்தார்” என்று கூறினர்.
நீளாதேவியின் தோழிகள், “நீளாதேவி தண்ணீர் தேவதையாக உள்ளாள். தண்ணீரை ‘நாரம்’ என்று கூறுவதுண்டு. இதனால்தான் பெருமாளுக்கு ‘நாராயணன்’ என்ற பெயர் வந்தது. தண்ணீரை பாலாக்கி, அதில் ஆதிசேஷனை மிதக்கச் செய்து தாங்குபவள் நீளாதேவி. அதனால் நீளாதேவியே உயர்ந்தவள்” என்றனர். இப்படியே பேச்சு நீண்டு கொண்டிருந்தது. தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க, ஸ்ரீதேவி, வைகுண்டத்தைவிட்டு புறப்பட்டு, தங்காலமலை பகுதிக்கு (திருத்தங்கல்) வந்து தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க தங்காலமலை என்னும் திருத்தங்கலுக்கு வந்து செங்கமல நாச்சியார் என்ற பெயரில் கடும் தவம் புரிந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், இவளுக்கு காட்சி கொடுத்து இவளே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்டார். திருமகள் தங்கியதால் இத்தலம் “திருத்தங்கல்’ என்ற பெயர் ஏற்பட்டது.
மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரன். அவனுக்கு உஷை என்ற மகள் இருந்தாள். ஒருசமயம் கனவில் தோன்றிய ராஜகுமாரன் குறித்து தனது தோழி சித்ரலேகையிடம் கூறி, அவனை சித்திரமாக வரைந்து கொடுக்கும்படி கேட்டாள். பிறகு அவன் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் அநிருத்தன் என்பது தெரியவந்தது. அவனையே திருமணம் செய்ய வேண்டும் என விரும்பினாள் உஷை. சித்ரலேகை தோழிக்காக துவாரகாபுரி சென்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த அநிருத்தனை தூக்கிக் கொண்டு வாணாசுரன் மாளிகைக்கு வந்தாள். கண்விழித்துப் பார்த்த அநிருத்தனுக்கு ஏதும் புரியவில்லை. நடந்தவற்றை அறிந்து உஷையை காந்தர்வ மணம் புரிந்து கொண்டான். இதையறிந்த வாணாசுரன், மணம் புரிந்து கொண்டவர்களை கொல்ல முயன்றான். அப்போது அவர்களைக் கொன்றால் பாணாசுரனும் அழிந்து போவான் என்று அசரீரி ஒலித்தது. அநிருத்தனை சிறை வைத்தான் பாணாசுரன். தகவல் அறிந்த கிருஷ்ணர் வந்து வாணாசுரனை வென்றார். துவாரகையில் திருமணம் நடத்த முடிவு செய்த கிருஷ்ணர், புரூர சக்கரவர்த்தியின் விருப்பத்துக்காக இருவருக்கும் திருத்தங்கலில் திருமணம் செய்துவைத்து நின்ற நாராயண பெருமாளாக அருள்பாலித்து வருகிறார்.
கோயில் சிறப்புகள் :
• திருத்தங்கல் பெருமாள் கோயில் “தங்காலமலை’ மீது அமைந்துள்ளது. மலைக்கோயிலான இதில் இரண்டு நிலைகள் உள்ளன. மூலவரான “நின்ற நாராயணப்பெருமாள்’ மேல் நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்ற திருநாமங்கள் உண்டு.
• இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் தனி சன்னதியில் அருளுகிறாள். இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்ற திருநாமங்கள் உண்டு.
• இத்தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமங்கையாழ்வார் நான்கு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
• ஸ்ரீரங்கம், அழகர்கோவிலைப்போல் இங்கும் சோமசந்திர விமானம் உள்ளது.
• பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி ஆகியன தல தீர்த்தங்களாக உள்ளன.
• சுவேதம் என்ற தீவில் இருந்த ஆலமரத்திற்கும், ஆதிசேஷனுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண இருவரும் பிரம்மனிடம் சென்றனர். பிரம்மா,””ஆதிசேஷனே சிறந்தவன். அவன் மீது தான் பெருமாள் எப்போதும் பள்ளி கொண்டுள்ளார். ஆனால், உலகம் அழியும் காலத்தில் மட்டுமே ஆலிலை மீது பள்ளி கொள்கிறார்,”என கூறினார். வருத்தமடைந்த ஆலமரம் தனது சிறப்பை உயர்த்த பெருமாளை நோக்கி தவமிருந்தது. தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், “”உனது விருப்பம் என்ன?”என கேட்டார். அதற்கு ஆலமரம், “”தாங்கள் எப்போதும் நான் உதிர்க்கும் இலை மீதும் பள்ளிகொண்டருள வேண்டும்,” என கேட்டது. அதற்கு பெருமாள், “”திருமகள் தவம் செய்யும் திருத்தங்கலில் நீ மலை வடிவில் சென்று அமர்வாயாக. நான் திருமகளை திருமணம் செய்ய வரும் காலத்தில், உன் மீது நின்றும், பள்ளிகொண்டும் அருள்பாலிப்பேன்,” என்றார். மலை வடிவில் இங்கு தங்கிய ஆலமரம், தங்கும் ஆல மலை எனப்பட்டது. காலப்போக்கில் தங்காலமலை ஆனது.
• சூரியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டபோது, சூரியன் பெருமாளை வேண்ட, அவர் திருத்தங்கல் தீர்த்தத்தில் நீராடினால் தோஷங்கள் நீங்கும் என்றார். அதன்படிச் சூரியனும் வழிபாடு. செய்து தனது பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக் கொண்ட தலம் இது.
• கருடாழ்வார் இங்கு நான்கு திருக்கரங்களுடன் உள்ளார். முன்னிரு கரங்கள் வணங்கிய நிலையிலும் பின் கரங்களில் அமிர்த கலசம், வாசுகி, நாகத்துடனும் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். தனக்கு எதிரியான வாசுகியை நண்பனாக ஏற்றுத் தன் கையில் கருடன் ஏந்தி இருப்பது இத்தலத்தின் குறிப்பிடத்தக்க அம்சம். இத்தலத்தில் மட்டும்தான் இவ்வாறு மாறுபட்ட கோலத்தில் கருடன் காட்சி தருகிறார். எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இவரை வழிபட்டால் அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள்.
• அனுமன், சக்கரத்தாழ்வார் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். அருணன், மார்க்கண்டேயர், பிருகு மகரிஷி ஆகியோர் மூலஸ்தானத்தில் உள்ளனர்.
• இத்தலம் அமைந்துள்ள மலையிலேயே சிவன், முருகனுக்கும் கோயில்கள் உள்ளன.
• பெருமாளின் மூலஸ்தானத்தில் நான்கு தாயார்கள் உள்ளனர். அன்னநாயகி(ஸ்ரீதேவி), அம்ருதநாயகி(பூமாதேவி), அனந்தநாயகி(நீளாதேவி), ஜாம்பவதி. இவர்களில் ஜாம்பவதியை இத்தலத்தில் தான் பெருமாள் திருமணம் செய்து கொண்டாராம்.
• இத்தலத்தில், தாயார் நின்ற கோலத்தில் மிக உயரமாக காட்சி தருகிறார். தாயாருக்கு தினமும் திருமஞ்சனமும், பெருமாளுக்கு விசேஷ நாட்களில் தைலக்காப்பும் சாத்தப்படுகிறது.
• ஆழ்வார்கள் இத்தல பெருமாளை திருத்தங்காலப்பன் என்ற பெயரில் தான் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
• சந்திர கேது என்ற மன்னன் ஏகாதசி உபவாசம் இருந்து மறுநாள் துவாதசி ஆரம்பிக்கும் முன்னே என்னை தேய்த்து ஸ்நானம் செய்தபடியால் புலியாக பிறக்க நேரிட்டது. இந்த க்ஷேத்திரத்திற்கு வந்ததும் தன் பூர்வ ஜென்ம ஞாபகம் ஏற்பட பகவானை நோக்கி பிரார்த்தித்தது. பகவானும் திருவருட் கொண்டு அந்த புலிக்கு தரிசனம் கொடுத்து முக்தி கொடுத்தார்.
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனி மாத பிரம்மோற்சவத்தில் 5-ம் நாள் மங்களாசாசனம், கருட சேவை, 9-ம் நாள் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில்,
திருத்தங்கல்-626 130,
விருதுநகர் மாவட்டம்.
போன்:
+91- 94426 65443
அமைவிடம்:
விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் திருத்தங்கல் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 12 =