#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பூம்பாறை

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பூம்பாறை
60.#அருள்மிகு_குழந்தை_வேலப்பர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : குழந்தை வேலப்பர்
ஊர் : பூம்பாறை, கொடைக்கானல்
மாவட்டம் : திண்டுக்கல்
ஸ்தல வரலாறு :
மூலவர் குழந்தை வேலப்பர். அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோயில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார். அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு குழந்தையும் தாயும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டது. நடந்த சம்பவத்தை தனது ஞான திருஷ்டியால் கண்ட அருணகிரிநாதர் குழந்தை வேடம் வந்து தன் உயிரை காப்பாற்றியதால் முருகரை குழந்தை வேலர் என்று அழைத்தார். இப்போதும் முருகர் குழந்தை வேலப்பராக அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் அருகிலேயே அருணகிரிநாதருக்கும் சிலையுடன் கோவில் உள்ளது.
குழந்தை வேலாயுத சுவாமி சித்தர் போகரால் நவபாஷணத்தால் உருவாக்கப்பட்டவர். போகர் பழனி மலைக்கும் பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் அமர்ந்து தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயண பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். அந்த சிலையை பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார். பின்னர் மறுபடியும் சீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து குருமூப்பு என்ற அருமருந்தால் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு முருகர் சிலையை உருவாக்கினார். அந்த சிலையே இப்போதுள்ள பூம்பாறை மலையுச்சியுள்ள கோயிலில் மூலவராக உள்ளார்.
கோயில் சிறப்புகள் :
• இந்தியாவில் உள்ள 2 கோவில்களில் மட்டுமே நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன. அவை பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை.
• இத்தல முருகர் விழாக்காலத்தில் தேரில் வீதி உலாவின் போது தேரின் முன்புறம், மற்றும் பின்புறம் வடம் பிடித்து தேர் இயக்கப்படுகிறது. இப்படி இருவடத்தேர் இயங்குவதை இங்கு காணலாம். அத்துடன் முருகனடியார்கள் வரிசையாக நின்று தேர் அச்சின் மீது 25000 தேங்காய்களை உடைக்கும் வழிபாடு கண்கொள்ளா காட்சியாகும்.
• குழந்தை வேலாயுத சுவாமி கோயிலுக்கு மூன்று ஆயிரம் ஆண்டுகள் புராண வரலாறு உள்ளது. மிகவும் பழமையான சிறிய கோயில். இக்கோயில் மிகப்பழமை வாய்ந்தது என்பதற்கு இங்குள்ள கிரந்த எழுத்துக்களும் பழங்கால சிலை அழகும் சான்றாக உள்ளது.
• சங்ககாலத்தில் இந்த மலையின் பெயர் கோடைமலை.
• மகாபாரத புராணத்தில் பஞ்ச பாண்டவர்கள் தங்களது வனவாசத்தின் ஒரு பகுதியாக பூம்பாறைக்கு வந்தனர். அங்கு போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குருமூப்பு என அழைக்கப்பட்ட முருகன் சிலையை அவர்கள் வழிபட்டதாக கூறப்படுகிறது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சேர மன்னன், குருமூப்பு முருகன் சிலையை சுற்றிலும் ஒரு மண்டபத்தை எழுப்பினார். சேரன் ஆட்சியின் போது இந்த கோயிலுக்கு வந்த அருணகிரிநாதர் இந்த கோயிலில் தங்கி குருமூப்பு முருகனை வணங்கி வழிபட்டார்.
• குழந்தை வேலப்பர் மேற்கு திசையை நோக்கி அருள் பாலிக்கிறார். குழந்தை வடிவம் என்பதாலோ புன்னகை பூத்து நிற்கும் அருள் உருவம்.
• பழனி முருகனைப் போல மிகவும் சக்தி வாய்ந்த இந்த குழந்தை வேலப்பர் மிகவும் பிரசித்தி பெற்றவர் இல்லை என்றாலும், யார் ஒருவருக்கு இந்த முருகன் தரிசனம் தர நினைக்கின்றாரோ அவர் மட்டுமே இந்த ஆல்யாத்திற்கு செல்ல முடியும் என்பது ஐதீகம்.
• முருகப்பெருமானின் அருகிலேயே அருணகிரிநாதருக்கும் சிலை உள்ளது. இங்கு வந்து வழிபடுபவர்களின் பாவ வினைகள் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
திருவிழா:
பழநி தைப்பூச திருவிழாவின் மறுநாள் மகம் நட்சத்திரத்தில் கொடியேற்றம், அடுத்து திருவீதியுலாவாக வாகனப்புறப்பாடு. 9ம்நாள்(கேட்டை நட்சத்திரம்) திருத்தேர் உலா, 10ம் நாள் முருகனை பழநிக்கு வழியனுப்பும் விழா.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மாறுதலுக்குட்பட்டது.
முகவரி:
அருள்மி குழந்தை வேலப்பர் திருக்கோயில்
பூம்பாறை 624103
கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம்
அமைவிடம்:
கொடைக்கானலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =