22.#அருள்மிகு_குற்றம்_பொறுத்தநாதர்_திருக்கோயில்_வரலாறு

February 24, 2023 0 Comments

மூலவர் : குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர் )
அம்மன் : கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை )
தல விருட்சம் : கொடி முல்லை
தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி,
பொற்றாமரை, இந்திர தீர்த்தம்
புராண பெயர் : கருப்பறியலூர், கர்மநாசபுரம்,
மேலைக்காழி
ஊர் : தலைஞாயிறு
மாவட்டம் : நாகப்பட்டினம்
இந்த உலகில் தவறு செய்யாத மனிதன் என்று யாருமே இருக்க முடியாது. தவறு செய்வது எப்படி மனித இயல்போ அவற்றை பொருத்தருள்வது தெய்வத்தின் இயல்பாகும். எப்படிப்பட்ட தவறு செய்யும் எவரையும் மன்னிக்கும் விசாலமான மனம் கொண்டவர் சிவபெருமான். அந்த சிவபெருமானைச் சரணடைந்து தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பவர்களுக்கு அந்த சிவன் அருள் புரிகிறார்.
ராவணனின் மகன் மேகநாதன். இந்திரனை போரில் வென்றதால் இவனுக்கு இந்திரஜித் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானம் மூலம் பறந்து கொண்டிருந்தான். வழியில் விமானம் தடைபட்டு நின்றது. கீழே பார்த்தபோது சிவாலயத்தின் மீது பறந்ததை உணர்ந்தான் . இதனால் இந்த தடை ஏற்பட்டது என அறிந்தான்.
இதனால் வருந்திய இந்திரஜித் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தான். இவனது கவலை நீங்கி விமானம் மறுபடியும் பறந்தது. இப்படிப்பட்ட அற்புத லிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அது முடியாமல் போனதால் மயங்கி விழுந்தான்.
இந்த செய்தியை கேட்ட ராவணன் இத்தல சிவனின் திருவடியில் விழுந்து, தன் மகனின் குற்றத்தை பொறுத்து அருளுமாறு வேண்டினான். இறைவனும் அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் “குற்றம் பொறுத்த நாதர்’ எனப்படுகிறார்.
இத்தலத்தில் மற்றுமொரு வரலாறும் சொல்லப்படுகிறது.
ஒருமுறை இந்திரன் இறுமாப்புடன் கயிலைக்குச் சென்றான். அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன்முன் தோன்றினார். இந்திரன் இறைவன் என்றறியாமல் அவர் மீது வச்சிராயுதத்தை எறிந்தான். அதன்பின் இறைவர் என்று அறிந்து தன்பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான்.
இறைவனும் இந்திரனின் குற்றத்தை பொறுத்தருள் செய்தமையால் குற்றம் பொறுத்த நாதர் என்று இத்தல இறைவனுக்கு பெயர் ஏற்பட்டது என்று தலவரலாறு கூறுகிறது.
அனுமன் தோஷம் நீங்கிய தலம் ராவண யுத்தத்தில் ராவணனை கொன்ற தோஷம் நீங்க ராமர், சிவபூஜை செய்ய நினைத்தார். எனவே அனுமனிடம் இரண்டு நாழிகைக்குள் ஒரு சிவலிங்கம் கொண்டு வா’ என்றார்.
உத்தரவை ஏற்ற அனுமன் வட திசை நோக்கி சென்றான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமன் வராததால் ராமர் மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது.
ராமர் பூஜை செய்த தலம் ராமேஸ்வரம் ஆனது. தான் வருவதற்குள் லிங்கம் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அத்துடன் அந்த லிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான். ஆனால் முடியவில்லை. இப்படி செய்ததால் அனுமனுக்கு சிவஅபராதம் ஏற்பட்டது.
சிவனை குறித்து தவமிருந்தால் சிவ அபராதம் நீங்கும் என ராமர், அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்ய, சிவன் தோன்றி, “”அனுமனே! நீ கன்மபுரம் எனப்படும் தலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும்,”என அருள்பாலித்தார்.
அனுமனும் அதன் படி தலைஞாயிறு வந்து வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இத்தலத்தின் வடகிழக்கில் தன்பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார். இத்தலம் தற்போது “திருக்குரக்கா’ என வழங்கப்படுகிறது.
• இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
• இத்தலம் இந்நாளில் தலைஞாயிறு என்று வழங்கப்படுகிறது. ஊரின் பெயர் திருக்கருப்பறியலூர் என்றாலும் இங்குள்ள ஆலயம் கொடிக்கோயில் என்று பெயர் பெறும். கொடி என்பது ஒருவகை முல்லை. முல்லையை தலவிருட்சமாகப் பெற்ற கோயில் ஆதலால் கொடிக்கோயில் எனப்பெயர் பெற்றது.
• சீர்காழிக்கு மேற்கில் இருப்பதால் மேலைக்காழி என்றும், சூரியன் வழிபட்டதால் தலைஞாயிறு என்றும், ஆதித்யபுரி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
• மூலவர் குற்றம் பொறுத்தநாதர் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கியும் அம்பாள் கோல்வளைநாயகி, தெற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், லிங்கோத்பவர், துர்க்கை மற்றும் பிரம்மா காணப்படுகின்றனர்.
• வெளிப் பிராகாரத்தில் சீர்காழியில் இருப்பதுபோல உயர்ந்த தனிக்கோயிலாக சட்டைநாதர் சந்நிதி உள்ளது. மேலேறிச் சென்று தோணியப்பரைத் தரிசித்து அதற்கும் மேலே சென்று சட்டைநாதரைத் தரிசிக்க செங்குத்தான மரப்படிகளை ஏற வேண்டும். தோணியப்பர் சந்நிதியை இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர் கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி என்றழைக்கின்றனர். தலமரமான கொடிமுல்லை, லிங்கோத்பவருக்கு எதிரில் காணப்படுகிறது.
• இத்தலத்தில் நாம் செய்யும் அறச்செயல்கள் யாவும் பதின்மடங்காக பெருகும் என்று வசிஷ்டருக்கு பிரம்மா கூறியதாக தல புராணம் குறிப்பிடுகிறது. வசிஷ்டரும் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டு உய்வுற்றார் என்று தல புராணம் மேலும் குறிப்பிடுகிறது.
• சுந்தரர் தனது பதிகத்தில் இக்கோவிலை கொடிக்கோயில் என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிட்டுள்ளார்.
• விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தான். இறைவன் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ந்த மன்னன் இத்திருக்கோயிலை அழகுற கட்டினான் என்பது வரலாறு.
• சூரிய பகவான் வழிபட்டதால் இத்தலம் தலைஞாயிறு எனப் பெயர் பெற்றது.
• 72 மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர்.
• இத்தல இறைவன் வசிஷ்டரால் பூஜிக்கப்பட்டவர்.
• சிலருக்கு கருவிலே சிசுக்கள் கலைவது உண்டு. சிலருக்கு குழந்தைகள் பிறந்த உடன் இறப்பதும், சில குடும்பத்தில் சிசு மரணம் ஏற்படுதலும், சில குடும்பங்களில் விபத்துகளினால் துர்மரணம் நிகழ்வதும் உண்டாகின்றன. இவை எல்லாம் ‘ஆலாள’ என்ற தோஷத்தினால் நிகழ்கின்றன. இத்தோஷங்களை கோயில்களில் பிரார்த்தித்துத்தான் போக்க வேண்டுமே அல்லாமல் பரிகாரம், சிரார்த்தம் போன்றவற்றால் நீக்க இயலாது.
• இத்திருக்கோயில் கரும நாசனி என சித்தர் பெருமக்களால் போற்றப்படும் திவ்விய தலம்.
• தேவர்கள், இத்திருத்தலத்தை கர்ம நாசபுரம் என்ற பெயரால் அழைத்தனர்.
• இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 27 வது தேவாரத்தலம் ஆகும்.
நடை திறப்பு
காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும்,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கும்.
முகவரி
அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்
தலைஞாயிறு
நாகப்பட்டினம் மாவட்டம் – 614712
தொலைபேசி எண்
+91- 4364 – 258 833
மயிலாடுதுறை – மணல்மேடு சாலையில் அமைந்துள்ள பட்டவர்த்தி என்ற சிற்றூரில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் – திருப்பனந்தாள் சாலையில், தலைஞாயிறு என்று கைகாட்டி உள்ள இடத்தில், வலதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 2 =