#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்சிறுபுலியூர்

September 30, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்சிறுபுலியூர்
246.#அருள்மிகு_கிருபாசமுத்திரப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : அருமாகடலமுதன், சலசயனப்பெருமாள்
உற்சவர் : கிருபாசமுத்திரப்பெருமாள், தயாநாயகி
தாயார் : திருமாமகள் நாச்சியார்
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : திருவனந்த தீர்த்தம், மானச தீர்த்தம்
புராண பெயர் : சலசயனம்,
பாலவியாக்ரபுரம்
ஊர் : திருச்சிறுபுலியூர்
மாவட்டம் : திருவாரூர்
ஸ்தல வரலாறு:
பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் இரு வேறு காலத்தே தாமே பகவானைத் தாங்குவதாக எண்ணம் கொண்டனர். விளைவு- இருவருக்கும் போட்டியும் வெறுப்பும் வளர்ந்து பகையாக மாறி .ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டது. கருடனைக் கண்டு அஞ்சிய ஆதிசேஷன் பல இடங்களில் ஓடித் திரிந்து, நிறைவாக இத்தலத்தை வந்தடைந்தார். இந்தப் பகை நீங்குவதற்காக ஆதிசேஷன் ஸ்தலசயனப் பெருமாளை நோக்கி தவம் இருந்தார். ஆதிசேஷனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் அவருக்கு மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தில், காட்சி கொடுத்து, அவரை தன் சயனமாக்கிக் கொண்டார். இத்தலத்தில் பெருமாள் குழந்தை வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அருமாகடலமுதன் கோயில் 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயில் ஆகும். அரிசிலாற்றின் கிளை நதிக்கரையில் பல ஏக்கர் நிலப்பரப்பில் இக்கோயில், கிழக்கு மேற்காக 142 அடி அகலமும் வடக்கு தெற்காக 225 அடி நீளமும், தெற்கு நோக்கி 72 அடி உயரம் கொண்ட 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோயில் ராஜ கோபுரத்தைக் கடந்து சென்றால், கொடிமரம், பலி பீடம், கருடாழ்வார் சந்நிதியை தரிசிக்கலாம். மூலவர் ஸ்தல சயனப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உடன் வியாசர், வியாக்ரபாதர், கங்கை உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், திருமால், விஷ்ணு துர்க்கை உள்ளனர். உள் திருச்சுற்றில் விஷ்வக்சேனர் அருள்பாலிக்கிறார். வெளி திருச்சுற்றில் ஆண்டாள், பால ஆஞ்சநேயர், திருமாமகள் தாயார், ஆழ்வார் சந்நிதிகள், யாகசாலை, திருமடப்பள்ளி, திருவாய்மொழி மண்டபம் உள்ளன.
கோயில் சிறப்புகள்:
•108 வைணவ திவ்ய தேசங்களில், திருச்சிறுபுலியூர் தலசயனப் பெருமாள் கோயில் 24-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.
•இக்கோயில் திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்கள் (பெரிய திருமொழி) பாடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
•பெருமாள் புஜங்க சயனத்தில் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
•108 திவ்ய தேசங்களில் பெருமாள் சயனக் கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சி தருவதாக அமைந்த தலங்கள் இரண்டுதான். முதல் தலமான ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப் பெரிய வடிவினனாக ஆனந்த சயனத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது தலமான இங்கே பெருமாள் பால சயனத்தில் குழந்தை வடிவினனாகக் காட்சி தருகிறார் என்பது இந்தத் தலத்தின் சிறப்பு.
•தில்லையில் நடராஜப் பெருமானை வேண்டி பல காலமாகத் தவம் செய்துவந்தார் வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர். அவருக்குக் காட்சி தந்த பரமனிடம், தமக்கு முக்திப் பேறு அளிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு பரமன், மகாவிஷ்ணு பால சயனத்தில் கோயில் கொண்ட இத்தலத்தே தவம் புரியுமாறு வழி கூறினார். அதன்படி இந்தத் தலம் வந்த வியாக்ரபாதர், கடுந்தவத்தில் ஈடுபட்டார். அவருக்குக் காட்சி தந்த பெருமாள், அருள்புரிந்து அருகே வைத்துக் கொண்டார்.
•ஆதிசேஷ அம்சமான பதஞ்சலி முனிவரும் பெருமாளின் அருளுக்குப் பாத்திரராகி, பெருமாளின் அருகேயே இருந்துகொண்டார். தில்லையில் சிவநடம் கண்ட பதஞ்சலியும் வியாக்ரபாதரும், இங்கே பெருமாளின் அருகே கருவறையில் காட்சி தருகின்றனர். இவ்வாறு, புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அம்முனிவருக்கு பால சயனக் கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலத்துக்கு திருச்சிறுபுலியூர் என்று பெயர் ஏற்பட்டது.
•திவ்யதேசத்தின் பெயரில் தான் சிறியது இருக்கிறதே தவிர, எம்பெருமானின் கருணையில் மிகப்பெரிய கடல். ஆம், எம்பெருமானின் திருநாமம், அருள்மாகடல்.
•இத்தலத்தில் ஆதிசேஷனுக்கும் தனி கோயில் உள்ளது
•இங்கு பெருமாள் நந்தியாவர்த்த விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்
•கருடாழ்வாருக்கு பெருமாள் அபயமளித்த தலமாக இருப்பதால் பூமிக்கு கீழ் கருடன் சந்நிதி அமைந்துள்ளது. மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷனுக்கு சந்நிதி உள்ளது.
திருவிழா:
சித்திரை வருடப் பிறப்பு, வைகாசி பிரம்மோற்சவம், ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி பவித்ரோற்சவம், ஐப்பசி மணவாள மாமுனிகள் விழா, திருக்கார்த்திகை விழா, மார்கழி வைகுண்ட ஏகாதசி, பொங்கல் திருவிழா, மாசி மாத அனந்தாழ்வார் விழா, பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில்,
திருச்சிறுபுலியூர்- 609 801,
திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91-4366-233 041, 233 826
அமைவிடம்:
மயிலாடுதுறையிலிருந்து (35கி.மீ) பேரளம் செல்லும் பஸ்சில் கொல்லுமாங்குடி ஸ்டாப்பில் இறங்க வேண்டும். அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் திருச்சிறுபுலியூர் உள்ளது
.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #திருச்சிறுபுலியூர் #கிருபாசமுத்திரப்பெருமாள் #அருமாகடலமுதன் #சலசயனப்பெருமாள் #திருமாமகள்நாச்சியார் #திருவாரூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 18 =