#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மயிலாப்பூர்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மயிலாப்பூர்
மூலவர் : கபாலீஸ்வரர்
அம்மன் : கற்பகாம்பாள்
தல விருட்சம் : புன்னை மரம்
புராண பெயர் : கபாலீச்சரம், திருமயிலாப்பூர்
ஊர் : மயிலாப்பூர்
மாவட்டம் : சென்னை
ஸ்தல வரலாறு :
அம்பிகை சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் , “நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய்’ என சாபமிட்டார். “சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய்’ எனக் கூறினார்.
அவ்வாறே இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பூஜித்து தேவியார் வழிபட்டார். அவர்தம் அரும் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தேவியின் முன் தோன்றி, “மயிலாய் இருந்த பழி உன்னை விட்டகன்றது. கற்பகவல்லி என்பதான பெயர் உனக்காகுக’ என வரம் அருளினார். அச்சமயம் தேவியார் பரமனை நோக்கி அடியேன் இங்கு தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதி “மயிலை’ என பெயர் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பரமனும் அவ்வாறே அருளியதாக வரலாறு கூறுகிறது.
ஒரு காலத்தில் சிவபெருமானை போன்று, ஐந்து முகங்களுடன் திகழ்ந்த பிரம்மதேவன், ‘தானும் சிவனாருக்கு இணையானவனே!’ என்று கர்வம் கொண்டிருந்தான். அதை அடக்க எண்ணிய சிவனார், பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஆகாயத்தை நோக்கி இருந்த ஒன்றைக் கிள்ளி எறிந்தார். கீழே விழுந்த பிரம்ம கபாலத்தைத் கையில் ஏந்தினார். இதனால் பிரம்மன் தனது படைப்பாற்றலையும் இழந்தான். பிறகு, தன் தவறுணர்ந்த பிரம்ம தேவன் திருமயிலைக்கு வந்து, சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தான். இதனால் மகிழ்ந்த சிவனார், அவனுக்கு படைப்பாற்றலை அருளியதுடன், அவன் வேண்டுகோளுக்கு இணங்கி கபாலீஸ்வரர் எனும் திருநாமத்துடன் இங்கேயே கோயில் கொண்டார்.
முற்காலத்தில் துறைமுகப் பட்டினமாக திகழ்ந்தது மயிலை. மூன்று முறை கடல் பொங்கி, பெரும் நிலப்பகுதியை விழுங்கியதால், மயிலையின் பரப்பளவு சுருங்கி விட்டது என்கிறார்கள். புராதனமான கபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் கடற்கரை அருகில் இருந்தது. அருணகிரி நாதர் தனது திருப்புகழில் ‘கடலக் கரை திரையருகே சூழ் மயிலைப்பதிதனில் உறைவோனே’ என்று குறிப்பிடுகிறார். எனவே அவர் காலத்திலும் (கி.பி.1540) கோயில் கடற்கரை அருகிலேயே இருந்திருக்க வேண்டும் என்பதை அறியலாம். ‘பிற்காலத்தில், இந்தக் கோயில் போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்டது என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களது கருத்து’ என்று குறிப்பிட்டுள்ளார் பம்மல் சம்பந்த முதலியார். 1923-ல் கோயிலின் எஞ்சிய பகுதிகள் சாந்தோம் கடற்கரையில் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் கண்டெடுக்கப்பட்டன.
தற்போது கோயில் இருக் கும் இடத்தில் முன்பு அருள் பாலித்தது ஸ்ரீசிங்காரவேலர் மட்டுமே என்கிறார்கள். இதற்குச் சான்றாக கபாலீஸ்வரரின் கருவறை விமானத்தை விட சிங்காரவேலரின் கருவறை விமானம் சற்றே உயரமாக இருப்பதைக் கூறுகின்றனர். கி.பி.1672- இல் பிரெஞ்சுக் காரர்களுக்கும், மூர் பிரிவைச் சேர்ந்த துருக்கியர்களுக்கும் நடந்த போரின்போது பிரெஞ்சுப் படையின் ஒரு பகுதியினர் இப்போதுள்ள கோயிலில் பதுங்கியிருந்தனர். நூறாண்டுகளுக்கு முன்பு மாட வீதிகளைச் சுற்றிச் சத்திரங்களும், மடங்களுமே இருந்தனவாம். குன்றக்குடி ஆதினம், குமாரதேவர் மடம் ஆகியவையும், சித்திரச் சத்திரம் ஆகியன இன்றும் உள்ளன.
கோயில் சிறப்புகள் :
• இத்தலம் திருமயிலாப்பு என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது
• மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரம்மாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது.
• உமையவள், மயிலாக வந்து, இங்கு ஈசனை வழிபட்டதால்- மயிலை, சோமுக அசுரன் களவாடிச் சென்ற வேதங்களை மகா விஷ்ணு மீட்டு வந்து இங்கு சேர்த்ததால்- வேதபுரி, சுக்ராச்சார்யார் இங்குள்ள ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால்- சுக்ரபுரி, மயிலை மற்றும் திருவொற்றியூரில் வாழ்ந்த கபாலிகர்கள் ஈசனை போற்றி வழிபட்டதால்- கபாலீச்சரம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது திருமயிலை.
• கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வார்- ‘மாமயிலை’ என்றும், கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார்- ‘மயிலை’ மற்றும் ‘மாமயிலை’ ஆகிய பெயர்களாலும், சுந்தரர் ‘தொன்மயிலை’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
• பல்லவ மன்னன் நந்திவர்மனை, ‘மயிலைக் காவலன்’ என்கிறது ‘நந்திக் கலம்பகம்’.
• அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் மற்றும் சேக்கிழார் ஆகியோரால் பாடப் பெற்ற அற்புதத் தலம் மயிலை.
• ஏழு என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட விஷயங்கள் மயிலையின் தனிச் சிறப்பு. ஏழு சிவன் கோயில்கள் (கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்த பாலீஸ்வரர்). ஏழு பெருமாள் கோயில்கள், ஏழு குளங்கள் (கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், கடவுள் தீர்த்தம் (கடல்), ராம தீர்த்தம்) என்று இந்தப் பட்டியல் நீளுகிறது. இங்குள்ள ஏழு சிவாலயங்களையும் ஒரே நாளில் முறையாக தரிசித்தால் எல்லாப் பேறுகளும் கிடைக்குமாம். அதனால் ‘கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ என்று பெயர் பெற்றது.
• பேயாழ்வார், திருவள்ளுவர் மற்றும் வாயிலார் நாயனார் ஆகியோர் அவதரித்த தலம் இது. மயிலை யில் வள்ளுவருக்கு தனிக்கோயில் ஒன்று உண்டு.
• சிக்கல் திருத்தலத்தில் சக்தி வேல் பெற்ற முருகப் பெருமான், மயிலைக்கும் வந்து வழிபட்டு சிங்கார வேல் ஒன்றைப் பெற்றாராம். எனவே, இங்குள்ள முருகனுக்கு சிங்கார வேலன் என்று பெயர். இவ்வாறு தன்னை வணங்கிய முருகப் பெருமானிடம், ‘அண்ணன் விநாயகனையும் வணங்கு!’ என்று பணித்தார் ஈசன். அதன்படியே இங்குள்ள கணபதியையும் வணங்கி வழி பட்டார் கந்தவேள். இதனால் மகிழ்ந்த விநாயகர் ஆனந்தக் கூத்தாடினார். இவரே இங்கு நர்த்தன விநாயகராகக் காட்சி தருகிறார்.
• சூரனை வதம் செய்யும் முன்பு, முருகப்பெருமான் இக்கோயிலில் சிவனை வேண்டி தவமிருந்தார். சிவனும், அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து வேலாயுதம் கொடுத்தனுப்பினர். அதன்பின் முருகன், சூரனை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார். இவர் சிங்காரவேலராக அசுர மயிலுடன், ஒரு சன்னதியில் இருக்கிறார்.
• அசுரனை வென்றதால் இந்திரன் தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அப்போது அவரது வாகனமான ஐராவதம், தெய்வானையைப் பிரிய முடியாமல் அவளுடனேயே தங்கிவிட்டது. வள்ளியும், தெய்வானையும் யானை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர். இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம்.
• அரக்கர் பலரைக் கொன்ற தால், ஸ்ரீராமனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. இந்த தோஷம் நீங்க ஸ்ரீராமன், மயிலைக்கு வந்து கபாலீஸ்வரரை வழிபட்டு திருவிழா எடுத்தார். இன்னும் பல தேவர்களும் இங்கு வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். இந்தத் தகவல்களை ஸ்ரீஅமிர்தலிங்கத் தம்பிரானின், ‘திருமயிலைத் தல புராணம்’ கூறுகிறது.
• சிவபெருமான், உமையவளோடு சேர்ந்து திருமால், பிரம்மா, வியாக்ரபாதர், பதஞ்சலி மற்றும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச திருநாளாகும். இந்நாளில் சிவபெருமானை தரிசித்தால், பரமானந்த நிலை என்னும் பிறப்பற்ற நிலை பெறலாம் என்பது ஐதீகம். இவ்விழா இக்கோயிலில் ஒருகாலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தரும் இவ்விழாவை குறிப்பிட்டு பதிகம் பாடியிருக்கிறார். இங்கு தைப்பூசத்தை ஒட்டிய பவுர்ணமியன்று நடக்கும் தெப்பத்திருவிழாவில் சிவபார்வதியுடன், சிங்காரவேலரும் எழுந்தருளுகின்றார்.
• சிவநேசச் செட்டியார் என்ற அன்பரின் மகளாகிய பூம்பாவை, அரவு தீண்டி இறந்துபட, அவள் உடலை எரித்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்தில் அவரது தந்தையார் வைத்திருந்தார். அதை, அங்கெழுந்தருளிய சம்பந்தர் முன்வைக்க, அவர் “மட்டிட்ட புன்னை” என்ற பதிகம் பாடிப் பெண்ணுருவாக்கியருளினார்.
• திருமயிலையைப் பற்றியும் கபாலீசுவரரை பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய “மட்டிட்ட புன்னையங் கானல்…” எனத் தொடங்கும் பதிகமேயாகும். இப்பாடல்கள் மூலம் திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவரது மகள் பூம்பாவையை, ஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க முடிவு செய்தார். இந்நேரத்தில் மலர் பறிக்கச்சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிர் இழந்தாள். அவளை தகனம் செய்த சிவநேசர், அஸ்தியையும், எலும்பையும் ஒரு குடத்தில் போட்டு வைத்துவிட்டார்.
சம்பந்தர் இங்கு வந்ததும் நடந்ததை அறிந்து, சாம்பல் வைத்திருக்கும் குடத்தை கொண்டு வரக் கூறினார். அப்போது சம்பந்தர் சிவனை வேண்டி, பதிகம் பாடினார். “மண்ணில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நடத்தப்படும் தைப்பூசம் என்னும் நல்விழாவை காண்பதே பிறவிப்பயனாகும். அவ்விழாவைக் காணாமல் நீ சென்றுவிட்டது உனக்குத்தானே நஷ்டம்,” என்ற ரீதியில் இந்தப்பாடல் அமைந்தது. அவர் பாடியதும், பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். அவளை திருமணம் செய்து கொள்ளும்படி சிவநேசர் சம்பந்தரிடம் வேண்டினார். உயிர் இழந்தவளுக்கு மீண்டும் உயிர் அளித்ததால், அவள் எனக்கு மகளாகிறாள் எனச்சொல்லி சம்பந்தர் மறுத்து விட்டார். பூம்பாவையும் இறுதிவரை சிவப்பணியே செய்து சிவனடி சேர்ந்தாள். இவர் பாடிய 11 பாடல்களில் முதல் 10 பாடல்கள் பூம்பாவையை அழைக்கும் முறையில் உள்ளன. இப்பதிகத்தில் இத்தலத்து ஈசனையும் கோவில் பற்றியும் மயிலாப்பூர் பற்றியும் அழகுறக் கூறுகிறார்.
• பங்குனி மாதத்தில், அறுபத்து மூவரின், திருவிழா, சிறப்பாக நடைபெறுகிறது.
• கலிங்க தேச அரசன் தருமனின் மகன் சாம்பவன் என்பவன், தனது பெரும் பாவங்கள் தீர இங்கு வந்து, பங்குனி உத்திரத்தன்று இந்தத் தீர்த்தத் தில் நீராடி, ஸ்ரீகபாலீஸ்வரரை தொழுது, முக்தி அடைந்ததாக தல புராணம் கூறுகிறது.
• கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கேற்ப, இங்குள்ள வடக்கு பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் நின்றுபார்த்தால் கிழக்கு ராஜகோபுரம், அம்மன் கோபுரம், சிவன் கோபுரம், முருகன் கோபுரம், மேற்கு கோபுரம் என அனைத்து கோபுரங்களும் தெரியும். இந்த இடத்தில் தான் கோவிலுக்கான மிகப்பெரிய மணி அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தின் மேல்புறமும், வடபுறமும் யானை, யாழி, மயில், நாகர், ஆட்டுக்கிடா, நந்தி, காமதேனு, குதிரை போன்ற வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள மண்டபம் அமைந்துள்ளது.
• மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழா இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, எட்டாம் நூற்றாண்டில் இருந்தே கொண்டாடப்படுகிறது
திருவிழா:
பங்குனிப் பெருவிழா – பங்குனி – 10 நாட்கள் அறுபத்துமூவர் திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் அறுபத்துமூவர் விழா, தனித்துவம் வாய்ந்தது. பங்குனித் திருவிழாவின் 8-ம் நாளில், வெள்ளி வாகனத்தில் சிவனார் திருவீதியுலா வர, அவருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களும் வாகனத்தில் பவனி வரும் அழகைக் காண சிலிர்த்துப் போவோம். சிவ – பார்வதி தரிசனம் ஒருபக்கம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவீதியுலா இன்னொரு பக்கம் என விழாக்கோலம் பூண்டிருக்கும் வேளையில், அடியவர்களும் ஆண்டவனும் ஒன்றே என்பதைப் பறைசாற்றுகிற இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுவார்கள்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,
மயிலாப்பூர்,
சென்னை – 600 004.
போன்:
+91- 44 – 2464 1670.
அமைவிடம்:
சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ளது. சென்னையின் மிக முக்கிய பகுதி மயிலாப்பூர் என்பதால் பேருந்து வசதி நிறைய உள்ளது. மின்சார ரயில் வசதியும் மயிலாப்பூருக்கு உண்டு.