கடிதம்– 11– காதல்

August 22, 2014 0 Comments

கடிதம்– 11– காதல்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

பெண் பார்க்க செல்வதென முடிவெடுத்த பிறகு மதுரை சென்று என் கூட படித்த நண்பனை துணைக்கு கூப்பிட்டு கொண்டு என் பாட்டியுடன் சென்றேன் நெல்லை மாநகருக்கு…

நெல்லையப்பர் கோவிலில் வைத்து பெண்ணை பார்க்கிறேன் என்று சொன்னதால் பெண்ணும், அவள் உறவினர்களும் அங்கு ஏற்கனவே வந்திருந்து எனக்காக காத்திருந்தனர்…

எனக்கு எப்போதும் பிடித்த நீல வண்ண கலரில் அழுக்கு சட்டையுடன் ஆர்வமில்லாமல், கையில் வாட்ச் அணியாமல், எந்தவித ஆர்ப்பாட்டமில்லாமல் பார்த்தவுடன் என்னை எந்தப் பெண்ணிற்கும் பிடிக்கவே கூடாது என்கின்ற நோக்கத்துடன் கோவிலினுள் பெண் இருக்கும் இடத்திற்கு சென்றேன்… பெண்ணை பார்த்தேன்… பெண்ணிற்கு என்னை ரொம்ப பிடித்து போய்விட்டது என்பது அந்த பெண்ணின் முக சிரிப்பிலிருந்து தெரிந்தது. பெண் பார்க்கும் படலத்தை முடித்து கொண்டு இருப்பிடம் திரும்பி, தீவீரமான யோசனையில் ஈடுபட்டேன். அந்த யோசனையில் மூன்று விஷயங்கள் எனக்கு முக்கியமாக பட்டது நான் சரியான முடிவெடுக்க….

1. இந்தப் பெண் எனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ என் அப்பாவிற்கு பிடித்திருக்கிறது… அவருடைய ஒரே சந்தோஷத்திற்காக என் சந்தோஷத்தை விட்டு கொடுப்பதில் தவறில்லை….

2. நான் பார்த்த பெண்ணின் பெயர் பத்மா… ஆண்டாள் எனக்கு ஏதோ செய்தி அனுப்பியிருக்கிறாள் என்பதை 100% சதவீதம் ஊர்ஜிதமாக நம்பினேன்… அந்த நம்பிக்கை தான் எனக்கு அந்த பெண்ணை விட பெண்ணின் பெயரை பிடித்து போக வைத்தது…

3. என்னை பார்த்த நொடியே என்னை தனதாக்கி கொண்டது போல் ஒரு சந்தோஷத்தை தன் முகத்தில் கொண்டு வந்த பெண்ணா? அல்லது தனக்கென்று எந்த சந்தோஷமும் இல்லை எனக்கு சொக்கு சந்தோஷமே என் சந்தோஷம் என எனக்காகவே வாழ்ந்துவரும் வரும் காதலியா?….

தீவிரமான யோசனைக்கு பிறகு பெண்ணை பார்த்த அடுத்த நாள்,

Feb 19, 1999(வெள்ளிக்கிழமை)- பெண்ணை எனக்கு பிடித்து இருக்கின்றது என்று phone செய்து என் தந்தையிடம் சொன்னேன்…

என் வாழ்க்கையில் நான் எடுத்த மிக கடினமான முடிவு இதுவாக தான் இருக்கிறது இன்று வரை…

Feb 26, 1999(வெள்ளிக்கிழமை)- திருமண நிச்சயதார்த்தம் நடந்தது

April 05, 1999(ஞாயிற்றுக்கிழமை)- திருமணம் திருச்செந்தூர் கோவிலில் வைத்து நடந்தது.

எது நடந்ததோ அது நன்றாக நடந்தது….

எனக்கு May 30, 1999 – க்குள் திருச்செந்தூர் கோவிலில் வைத்து திருமணம் நடக்கும் என 100% தெரியும் – அதற்கு காரணம் என்னுடைய அப்போதைய வழிகாட்டியான ஒரு ஜோதிடரின் மேல் எனக்கிருந்த நம்பிக்கை தான்…

April 05, 1999 என் திருமணம் முடிந்த தினத்தில் இருந்து May 30, 1999 – வரை May 30 என்ன நடக்க போகின்றது என்று அந்த நாளை எதிர்பார்த்து இருந்தேன்… நான் எதிர்பார்த்த அந்த குறிப்பிட்ட நாளில் நடந்த சம்பவத்தை நான் துளி கூட எதிர்பார்க்கவில்லை…

May 28, 1999(வெள்ளிக்கிழமை)- என் தந்தை உடல் நலக் கோளாறினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

May 30, 1999(ஞாயிற்றுக்கிழமை)- என் தந்தை தவறான மருத்துவ சிகிச்சையினால் மரணமடைந்தார்.

எது நடக்க கூடாதோ அதுவும் சரியாக நடந்தது…

எதிர்பார்த்தது கிடைக்காத எனக்கு எதிர்பாராததும் கிடைத்தது கண்டு துவண்டு போனேன்…

உயிரின் இழப்பை கண்டு துடித்தேன்…

அணு அணுவாய் துன்பத்தை உணர்ந்தேன்…

May 30, 1999 காலை 6:44 க்கு உயிரோடு இருந்தவர் காலை 6:45 க்கு உயிரோடு இல்லை என்கின்ற கொடுமையை என்னவென்று சொல்வது;

என்னை நேசித்தவருக்கு, என்னை ஆளாக்கியவருக்கு, என்னை மனிதனாக்கியவருக்கு, நான் நிறைய திரும்ப கொடுக்க ஆசைப்பட்ட சூழ்நிலையில் அவர் தீடிரென்று எனக்கு கொடுத்து விட்டு சென்ற தனிமையானது

பச்சை மரத்துண்டை நெருப்பில் போட்டது போல,

மூச்சடக்கி நீரில் உயிர் விட்டது போல,

புகை மூட்டத்தில் சிக்கி இறந்தது போல,

சுவாசிக்க காற்றில்லாமல் ஆகாயத்திலிருந்து தள்ளி விடபட்டு ஜீவன் பிரிந்தது போல இருந்தது…

என் தந்தையின் நினைவின் நடுவே தீடிரென்று காதலியின் நினைவு…

நான் எந்தளவிற்கு என் தந்தையை நேசித்தனோ அதே போல் என்னை என்னுடைய காதலி நேசித்தாளே? அவளுக்கும் இது போன்று தானே இருந்திருக்கும் என்று…

எனக்கு என் தந்தையின் பிரிவு, பின் மண்டையில் விழுந்த சம்மட்டி அடி போல என்றால், என் பிரிவு என்னை உருகி, உருகி நேசித்தவளுக்கும் அப்படி தானே இருந்திருக்கும்.

நடந்ததை நினைத்தாலே நெஞ்சம் பதறுகின்றது….

100 அடி முன்னேற ஆசைப்பட்டவனை 1000 அடி கீழே கொண்டு சென்றது போல் இருந்தது என் தந்தையின் இழப்பு.

அவளுக்கும் அப்படித்தானே இருந்திருக்கும் – என் இழப்பு. என் அப்பாவின் மரணம், என் காதலிக்கு நான் இழைத்த நம்பிக்கை துரோகம் இரண்டும் சேர்ந்து என்னை முற்றிலும் வெறுமையாக்கி விட்டது…

வீட்டை விட்டு வெளியே இருக்கும் போதெல்லாம் அழுகை… அழுகை… அழுகை…

இதை தவிர வேறு எதையும் செய்யவில்லை….

Bike ஓட்டும் போது, தனியாக சாப்பிடும் போது, கோவிலில் சாமியை பார்க்கும் போது, சாலையில் என்னை கடந்து செல்லும் உயிரற்ற உடலை பார்க்கும் போது, ஏதேதோ என்ற புன்னகை மன்னன் பாட்டை கேட்கும் போது, நீல நிற வண்ணத்தை பார்க்கும் போது, ஆண்டாளை பார்க்கும் போது, (ஆண்டாளை தெரியவே தெரியாத போது ஆண்டாள் என்கின்ற வார்த்தையை என்னிடம் முதலில் உபயோகப்படுத்தியவள் – என் காதலி) Wills Cigarette – ஐ யாராவது புகைக்கும் போது, சாந்து பொட்டை நேர் கோடாக இட்டிருக்கும் பெண்களை பார்க்கும் போது, குழந்தைகள் விளையாடுவதை பார்க்கும்போது என எப்போதும் அழுகையுடன் மூளை பிசக்கியது போல வாழ்க்கை….

என் அழுகை தொடர்ந்ததா?… முடிந்ததா?… தொடர்கின்றதா?…

நான் ஏன் என் காதலியை விட்டுவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன்?…

என் காதலி என் திருமணம் பற்றி என்ன சொன்னாள்?….

அடுத்த கடிதத்தில்….

 

 

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =