#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அரசர்கோயில்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அரசர்கோயில்
71.#அருள்மிகு_சுந்தர_மகாலட்சுமி_ கோவில்_வரலாறு
மூலவர் : சுந்தர வரதராஜர்
தாயார் : சுந்தர மஹாலக்ஷ்மி
ஊர் : அரசர்கோயில்
மாவட்டம் : செங்கல்பட்டு
ஸ்தல வரலாறு :
நான்முகனுக்கு ஒரு முறை சாபம் ஏற்பட்டது. நான்முகன் சாப விமோசனத்தை நாடி முனிவர்களிடம் ஆலோசனை கேட்ட போது மண்ணாளும் வேந்தனும் விண்ணாளும் விஷ்ணுவும் சேர்ந்து எந்த இடத்தில் காட்சி தருகிறார்களோ அங்குதான் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும். உடனே பூலோகத்திற்குச் செல்லுங்கள் என்றனர் முனிவர்கள். அதன்படி மண்ணுலகம் வந்தார் நான்முகன். நான்முகனுக்கு சாப விமோசனம் அருள வேண்டும் என்று விஷ்ணு ஏற்கெனவே தீர்மானித்து இந்த அரசர் கோயில் இருக்கும் இடத்தில் எழுந்தருளினார். அதேசமயம் புனித யாத்திரையாக பூவுலகம் முழுவதும் சென்று கொண்டிருந்த ஜனக மகாராஜாவும் இத்தலத்தின் வழியாக வந்து கொண்டிருந்தார். விஷ்ணு எழுந்தருளிய தகவலைக் கேள்விப்பட்டு அவர் பெருமாளை தரிசிக்க சென்றார். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட நான்முகன் இப்பகுதிக்கு வந்து தன் தவத்தைத் தொடங்கி விஷ்ணுவின் ஆசியைப் பெற்றார். ஜனக மன்னனையும் பெருமாளையும் ஒன்றாக தரிசித்து சாப விமோசனம் பெற்றார். அந்த மகிழ்ச்சியில் அங்கேயே சிறிது காலம் தங்கி பெருமாளை ஆராதித்தார். தினமும் வந்து பெருமாளை தரிசித்து பூஜிப்பதை ஜனக மகாராஜாவும் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஜனகர் வராததால் பெருமாள் ஜனகர் தங்கியிருந்த இடத்திற்கே புறப்பட்டு வந்தார். அந்த வேளையில் ஜனகர் அங்கு இல்லை. தானே ஜனகர் அமரும் சிம்மாசனத்தில் அமர்ந்து ஜனகர் தனக்குச் செய்வது போன்றே பூஜைகளை தாமே செய்து கொண்டார். பிறகு ஜனகர் செய்ய வேண்டிய பூஜைகள் இன்று நடந்து விட்டன என காவலாளிகளிடம் சொல்லிவிட்டு பெருமாள் புறப்பட்டார்.
அரசு பணியாக வெளியே சென்றிருந்த ஜனகர் திரும்பி வந்து தன் சிம்மாசனத்திற்கு அருகே பெருமாளுக்கு தான் செய்தது போன்றே பூஜைகள் நடைபெற்றிருந்ததைப் பார்த்து காவலாளிகளிடம் கேட்டார். நடந்ததை அறிந்து சிலிர்த்தார். தன் நித்ய கர்மாவிலிருந்து தான் தவறி விட்டதற்குப் பிராயச்சித்தமாக பெருமாளுக்கு ஆலயம் எழுப்ப விண்ணப்பித்தார். பெருமாளோ தேவலோக விஸ்வகர்மாவினால் மட்டுமே இங்கு ஆலயம் எழுப்ப முடியும் என்று கூறி தேவலோக விஸ்வகர்மாவை வரவழைத்தார். ஆலயம் எழுப்ப தேவலோக விஸ்மகர்மாவிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி எழுப்பப்பட்ட ஆலயம்தான் இந்த அரசர்கோயில்.
நித்யகர்மா செய்ய ஜனகர் வராததால் பெருமாளே அவர் இருப்பிடம் நோக்கிச் சென்ற விவகாரத்தில் மகாலட்சுமி மனம் வருந்தினாள். பரந்தாமனை நோக்கி பக்தன் வரலாம். பக்தனை நோக்கி பரந்தாமன் செல்லலாமா? அவன் அவ்வளவு பெரிய பக்தனா? கோபம் கொண்டாள் லட்சுமி. இதனைக் கண்ட விஷ்ணு இங்கு எழும் ஆலயத்தில் உனக்கே முதல் மரியாதை கேட்ட வரங்களை கேட்டவாறே அருளும் மகத்தான சக்தியையும் உனக்கு அருள்கிறேன். இத்தலத்தில் உன்னை தரிசித்து உன் அருள் பெற்றவர்கள் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள்’ என்று சொல்லி மகாலட்சுமியின் கோபம் தீர்த்து அவளை மகிழ்வித்தார். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமி தாமரையில் வசிக்கும் தன் சார்பாக எப்போதும் பெருமாள் தம்முடைய கரத்தில் ஒரு தாமரை மொட்டை வைத்துக் கொண்டு அருள்பாலிக்குமாறு கேட்டுக் கொண்டாள். அதன்படியே பெருமாளும் தன் கரத்தில் தாமரை மொட்டை ஏந்தி கமலவரதராஜப் பெருமானாக கோயில் கொண்டார்.
கோயில் சிறப்புகள் :
• பெருமாள் சன்னிதியில் ஸ்ரீதேவி பூதேவியோடு கமல வரதராஜராக நின்ற திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார்.
• மூலவர் சாளக்ராமத்தால் ஆனவர்.
• விஷ்வக்சேனர் மணவாள மாமுனிகள் தேசிகர் ஆகியோரும் உள்ளார்கள்.
• ஜனக மகாராஜாவும் பெருமாளும் இத்தலத்தில் ஒன்றாக இருந்தபடியால் இத்தலம் அரசர்கோயில் என்று பெயர் ஏற்பட்டது.
• அரசர் கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தர மகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது தனி அதிசயமாகக் கொண்டாடப்படுகிறது.
• இத்தல சம்பிரதாயப்படி முதலில் தாயாரையே தரிசிக்க வேண்டும். கிழக்குப் பார்த்த சன்னிதியில் வீற்றிருக்கிறாள் லட்சுமி. மேலிரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க கீழிரு கரங்கள் அபய வரத முத்திரைகள் காட்ட பத்மாசனத்தில் பரப்பிரம்ம ஸ்வரூபிணியாக அமர்ந்திருக்கிறாள். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல்.
• ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் விசேஷ திருமஞ்சனம் மகாலட்சுமிக்கு செய்யப்படுகிறது.
• ஒரு இசை மண்டபம் உள்ளது. ஒவ்வொரு தூணும் விரலால் சுண்ட ஒவ்வொரு ஸ்வரத்தை எழுப்புகிறது.
• நான்கு வேதங்களைக் குறிக்கும் விதமாக இங்குள்ள ஒரு சிறு துளையில் குச்சி ஒன்றை உள்ளே செருகினால் அது மறு பக்கம் வெளி வரும் போது நான்கு பாகங்களாகப் பிளந்து வருகிறது.
• அட்சய கணபதி வைணவ தும்பிக்கை ஆழ்வாராக அருட்கோலம் காட்டுகிறார். அனுமன் ஒரு முறை விநாயகரிடம் இந்த அரசர்கோயில் நிவேதனங்களை தானே செய்ய அட்சய பாத்திரம் கேட்டார். அனுமனின் விருப்பத்தை மகாலட்சுமி அறிந்து விநாயகர் மூலம் அனுமனுக்கு அதை அளித்தாள். எனவே இந்த விநாயகர் அட்சய கணபதி என்று அழைக்கப்படுகிறார்.
• இந்த ஆலய பிரசாதங்கள் அனுமனின் மேற்பார்வையில் தயாரிக்கப்படுவதாக ஐதீகம்.
• சுந்தரமகாலட்சுமியின் சன்னிதிக்கு வெளியில் இடப்புறம் தலையில் பலாப்பழம் ஏந்திய பலாப்பழ சித்தர் ஒருவரின் சிற்பம் உள்ளது. இந்த சுந்தரமகாலட்சுமி தேவிக்கு அந்த சித்தர் தினமும் அதனை அன்னைக்குப் படைப்பார். இன்றும் அபிஷேக சமயங்களில் அன்னையைப் பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து பின் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
• தாயாரின் கருவறை கோஷ்டங்களில் யோகநரசிம்மமூர்த்தி குபேரன் காளிங்கநர்த்தன கண்ணன் பரமபதநாதர் திரிவிக்ரமர் ஆகிய பெருமாளின் அம்சங்களே தேவிக்கு காவலாக அருள்புரிகின்றனர். இந்த மூர்த்திகள் திருப்பணி செய்ய பூமியை தோண்டியபோது கிடைத்தவை.
• 64 லட்சுமி அவதாரங்களின் தாயார் அவர் இங்குள்ள மஹாலக்ஷ்மி ஆதலால் இவரை ஆதி மஹாலக்ஷ்மி என்று அழைக்கிறார்கள்.
• பல்லவர்கள் மற்றும் சோழர்கள் இக்கோயிலை நிறுவி பராமரித்து வந்துள்ளார்கள் .
• மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் பாலாறு, அரசர் கோயில் தலத்தில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் அதிசயம் கொண்டதாக அமைந்துள்ளது. இது தட்சிண பிரவாகம் என்று அழைக்கப்படுகிறது.
• இவ்வாலயத்தின் மற்றொரு தனிச்சிறப்பு, சித்ரா பவுர்ணமியில் பாலாற்றில் நடைபெறும் திருஊரல் திருவிழாவாகும். ஊரல் என்பதற்கு நீர் சுரத்தல், குளிர்ச்சி என்பது பொருள். சித்திரையின் வெப்பத்தைத் தணிக்க, பாலாறு தன்னையும், தன்னைச் சார்ந்த மக்களையும் குளிர்விப்பதாக இவ்விழா அமைந்துள்ளது.
• சித்திரையில் வரும் பவுர்ணமி அன்று காலை வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியோடு, லட்சுமி நாராயணபுரம், பூதூர் வழியே ஈசூர் சென்று அங்குள்ள பாலாற்றங்கரைக்கு எழுந்தருள்வார். அங்கே பெருமாளுக்குத் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். (காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் சார்பாகவும், காஞ்சிக்கு அருகே ஓடும் பாலாற்றில் சித்திரா பவுர்ணமி அன்று திருஊரல்விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது
• பாலாற்றில் சுமார் 100 சதுர மீட்டர் மணல் திட்டு உருவாக்கப்பட்டு, அதைச் சுற்றி 2 மீட்டர் அகலத்தில் மணலை அகழ்ந்து எடுத்து நீர் சுரக்கச் செய்வார்கள். பெருமாள் மணல் திட்டில் வீற்றிருக்க, சக்கரத்தாழ்வார் அந்த நீரில் சுற்றி வந்தபின், தீப ஆராதனைகள் காட்டப்படும். பிறகு நிலவொளியில் விழா முடியும் வரை, விடியும் வரை அங்கேயே காட்சி தருவார். விடியலில் மீண்டும் சக்கரத்தாழ்வார் நீரில் சுற்றி வருவார். அதன்பின் தீபாராதனைகள் முடிந்து பழையபடியே, அரசர் கோவில் வந்து சேர்வார். இவ்விழாவே திருஊரல் விழா என்று அழைக்கப்படுகிறது.
திருவிழா:
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் விசேஷ திருமஞ்சனம் மகாலட்சுமிக்கு செய்யப்படுகிறது. வரலட்சுமி விரதத்தன்றும் அட்சய திருதியையன்றும் இக்கோயில் விழாக்கோலம் கொள்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுந்தர மகாலட்சுமி சமேத கமல வரதராஜப்பெருமாள் திருக்கோவில்
அரசர் கோயில் 603 308
செங்கல்பட்டு
போன்:
+91 96985 10956 / 93817 44615
அமைவிடம் :
செங்கல்பட்டு – மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில் சுந்தர மஹாலக்ஷ்மி கோயில். படாளம் கூட்டு ரோடில் இருந்து ஷேர் ஆட்டோ மூலமும் கோயிலுக்குச் செல்லலாம்.