Blogger Facebook Twitter YouTube

கடிதம் – 41 – தர்ம யுத்தம்

download

பணத்தை வட்டிக்கு விடுபவர்கள்; லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள்; கொலைகாரர்கள்; திருடர்கள்; கெட்டவர்கள்; சாராயம் விற்பவர்கள்; பெண்களை வியாபாரமாக்கி பணம் சம்பாதிப்பவர்கள் etc., என இப்படி இயற்கைக்கு முரணான வகையில் சம்பாதிப்பவர்கள் எல்லோரும் வசதி வாய்ப்புடன் நன்றாக இருக்கின்றார்கள். பக்கத்து வீட்டுக்காரன் அவ்வளவு அயோக்கியத்தனம் செய்கின்றார்; பெத்த அம்மா, அப்பாவிற்கு கூட சோறு போடாமல் அவர்களை முதியோர் இல்லத்தில் தங்க வைத்திருக்கின்றார். ஆனால் அவர் நன்றாக இருக்கின்றார்; நான் மிகவும் நல்லவன்.கனவில் கூட பிறர்க்கு துன்பம் தராத எனக்கு மட்டும் என் இந்த அளவு பிரச்சினை என்கின்ற கேள்வி நம்மில் 98% பேருக்கு இருக்கும்.

படுபயங்கரமாக நான் கஷ்டப்படுகின்றேன் என்பது தெரிந்தும் கடவுள் என் பிரச்சினைகளுக்காக கண் திறக்கவே மாட்டேங்கிறார். நித்தம் கடவுளை வணங்கும் எனக்கு கண் திறக்காத தெய்வங்கள், கோவிலுக்கே போகாத அவருக்கு மட்டும் நிறைய நல்ல விஷயங்களை கொடுத்து கொண்டே இருக்கின்றதே இது எப்படி சாத்தியம் ஆகின்றது என்கின்ற கேள்வி கிட்டத்தட்ட கஷ்டப்படுகிறவர்கள் அனைவரின் மனதிலும் எழக்கூடிய கேள்வியாகவே என்றும் இருக்கின்றது.

இந்தக் கேள்விகளுக்கான பதிலை இரண்டாக வகைப்படுத்தலாம்.

#காஞ்சி_மஹா_பெரியவர் சொன்ன கதையில் இந்த கேள்விகளுக்கான பதில் இருக்கின்றது.

அந்த கதை

“ஒரே மருத்துவமனையில், ஒரே நேரத்தில் (நொடி சுத்தமாக), ஒரே இடத்தில், ஒரே திதி, ஒரே நட்சத்திரத்தில், ஒரே லக்னத்தில், ஒரே ராசியில் ஐந்து குழந்தைகள் வேவ்வேறு தம்பதிகளுக்கு பிறக்கின்றது.

அப்படி பிறந்த ஒரு குழந்தையின் பெற்றோர் பெரிய கோடீஸ்வரர். இந்த கோடீஸ்வர தம்பதியினர் அவர்களுக்கு குழந்தை பிறந்த உடன் அவர்களுக்கு பிறந்த குழந்தையை பெரிய A/c காரில் வீட்டிற்கு கூட்டி கொண்டு போய் விடுகின்றார்கள்.

இரண்டாவது குழந்தையின் பெற்றோர் நடுத்தர வர்க்கத்தினர். இந்த நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தம்பதியினர் அவர்களுக்கு குழந்தை பிறந்த உடன் அவர்களுக்கு பிறந்த குழந்தையை வாடகை காரில் வீட்டிற்கு கூட்டி கொண்டு போய் விடுகின்றார்கள்.

மூன்றாவது குழந்தையின் பெற்றோர் மிகவும் ஏழை வர்கத்தினர். இந்த ஏழை தம்பதியினர் அவர்களுக்கு குழந்தை பிறந்த உடன் அவர்களுக்கு பிறந்த குழந்தையை அரசு பேருந்தில் வீட்டிற்கு கூட்டி கொண்டு போய் விடுகின்றார்கள்.

நான்காவது குழந்தையின் பெற்றோர் கூலித் தொழிலாளிகள். இந்த தம்பதியினர் அவர்களுக்கு குழந்தை பிறந்த உடன் அவர்களுக்கு பிறந்த குழந்தையை சைக்கிள் ரிக்க்ஷாவில் கூட்டி கொண்டு போய் விடுகின்றார்கள்.

ஐந்தாவது குழந்தையின் பெற்றோர் குறவர் இனத்தினர். இவர்களுக்கு குழந்தை பிறந்த உடன் அவர்களுக்கு பிறந்த குழந்தையை நடந்தவாறே தூக்கி செல்கின்றனர்.

இவ்விடத்தில் தான் மகா பெரியவர் கேள்வி ஒன்றை கேட்கின்றார்.

அந்த கேள்வி

#மனிதன் பிறந்து பாவம் செய்தால் அவன் தண்டனையை அனுபவிக்கலாம். அது பற்றி யாரும் பேசப் போவதில்லை. ஆனால் பிறந்த குழந்தைகள் என்ன பாவத்தை செய்திருக்க முடியும். பாவமே செய்திருக்க முடியாத ஒரு குழந்தை மிக கஷ்டத்தில் பிறக்கின்றது. பிறக்கும் போதே புண்ணியம் செய்திருக்கவே முடியாத ஒரு குழந்தை ஓரளவிற்கு நல்ல வீட்டிலோ அல்லது மிகச் சிறந்த நல்ல வீட்டிலோ குழந்தையாக பிறக்கின்றது.

இது எப்படி சாத்தியம்.

இதை தான் இந்து மதத்தில் #பூர்வ_ஜென்ம புண்ணிய கணக்கு என்று சொல்லுகின்றார்கள்.

முன்பு நாமோ, நம் முன்னோரோ செய்த பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப இப்போது நாம் நல்ல / கெட்ட விஷயங்களை அனுபவிக்கின்றோம்.

ஆக கெட்டவன் ஒருவன் நன்றாக இருக்கிறான் என்று இன்றைய அவரின் நிலையை பார்க்கும் நீங்கள் அவரின் வம்சாவளி அடையும் வீழ்ச்சியை பார்க்க முடிவதில்லை.

என்னை #Chockisim பொறுத்தவரை கெட்டவர்கள் இன்று நன்றாக இருப்பதற்கு முன் ஜென்ம பயனே காரணம் என்பதை நான் தீர்க்கமாக நம்புகின்றேன்.

கெட்டவர்களின் குழந்தைகள், பேரன், பேத்திகள் கண்டிப்பாக பாதிக்கப்படுகின்றார்கள் என்பதையும் நான் அனுபவபூர்வமாக பார்த்திருக்கின்றேன்.

நீங்கள் கெட்டவர்கள் நன்றாக இருக்கின்றார்கள் என்று இனிமேல் உங்களை அவர்களுடன் ஒப்பீட்டுப் பார்க்காமல், நமக்கு இன்றைய வாழ்வு எப்படி இருந்தாலும் அனுதினமும் கடவுளுக்கு நன்றி சொல்லி அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்காகவே இந்த பிறப்பு என்பதை மனதில் நிறுத்தி நம்மால் இயன்றதை இல்லாதவர்களுக்கு கொடுத்து, நீயும் கடவுள்; நானும் கடவுள் என்பதை நினைவில் கொண்டு, நம் வாழ்க்கையின் போக்கை உதவி, நன்றி என்ற விஷயங்களால் மாற்றி, நாமும் நன்கு வாழ்ந்து நம் சந்ததியினரும் நன்கு வாழ முயற்சி எடுப்போம்.

நித்தம் நாம் வாழ முயற்சி செய்யும் வாழ்க்கையையே தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான யுத்தமாகத் தான் நான் பார்க்கின்றேன். யுத்தத்தின் முடிவு இன்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முடிவில் தர்மம் மட்டுமே தலையை காக்கும் என்பதை நாம் நினைவில் கொள்வோம்.

அதற்கு மனிதர்களாக மாறுவோம் – முதலில்

பின் அதை பார்த்து கடவுள் நம்மை கடவுள் ஆக்கும் நிலையை வாய்ப்பிருந்தால் நாமோ அல்லது நம் வம்சாவளிகளோ பார்க்கட்டும் …..

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Recent posts

Leave a comment

Your email address will not be published.

*error: Content is protected !!