கடிதம் – 20 – அனுபவமும், காற்றும்

November 22, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

“தனியாக பிறந்து, தனியாக வாழ்ந்து, தனியாக மறைந்து” என்கின்ற உண்மை நிலை தத்துவத்தின் நடுவே கொஞ்ச காலம் நான் கற்ற வாஸ்துவினால் மேலும் எனக்கென்று நண்பர்கள், உறவுகள் ஏற்படுத்தி என் வாழ்க்கையை கொஞ்சம் சந்தோஷமாக மாற்றி வாழ ஆசைப்பட்டதற்காவும்

என்னுடைய எதிர்கால இலக்கை இலகுவாகவும், சரியாகவும் அடைய –

நான் வாஸ்துவை உபயோகப்படுத்தினேன். உபயோகப்படுத்துகின்றேன்.

ஆண்டாள் அருளால் இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வாஸ்து பார்த்து இருப்பேன். அப்படி நான் சென்று பார்த்த இடங்களில் புதியதாக ஒரு வீடோ, நிறுவனமோ  கட்டும்போது, கட்டபோகும் அந்த கட்டிடத்தின் உரிமையாளரிடம் தயவுசெய்து உங்கள் உறவினர்களை முறையாக அழைத்து அவர்கள் முன்னிலையில், அவர்கள் ஆசீர்வாதத்துடன் பூமி பூஜை செய்யுங்கள் என்று கூறுவேன். சொல்லி வைத்தார் போல் இன்று வரை அப்படி கூறிய என்னை யாரும் ஏனோ அவர்கள் போட்ட அந்த பூஜைக்கு அழைத்ததே இல்லை. புது வீடு, புதிய நிறுவனம் மற்றும் புதிய தொழிற்சாலை கட்டுவதற்க்காக  என்னிடம் வாஸ்து பார்த்தவர்கள் யாரும் இதுவரை என்னை உறவாகவே எடுத்து கொள்ள வில்லை என்பது தான் பொய்யில்லா நிஜம். இந்த வலியின் வலி, கொடுத்தவர்களுக்கு தெரியாது; அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் மற்றும் தெரியும்.

எனக்கு ஏற்பட்ட இந்த வலிக்கு எது காரணம்?

காரணம் யார்?

காரணம் மற்றவர்களா?

காரணம் கடவுளா?

சற்று பொறுங்கள். சுடும் உண்மையை பின் பார்ப்போம்.

ஆண்டாள் அருளால் வாஸ்துவினால் எனக்கு கிடைத்த உறவுகளுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கின்றேன். அதிலும் குறிப்பாக ஒரே உறவுக்கு பலநூறு உதவிகளும், பலநூறு உறவுகளுக்கு குறைந்தது ஒரு உதவியாவது இதுவரை செய்து இருப்பேன். நான் செய்தவைகள் எல்லாம் பிரதிபலனை எதிர்பாரா உதவிகள். உள்ளத்திலிருந்து செய்த உதவிகள். நான் என்னுடன் பழகுபவர்களை என்றுமே தரம், இனம், மதம், ஜாதி பிரித்து பார்த்து பழகுவதில்லை. ஆனால் ஏனோ என்னை என்னிடம் இருந்தே இனம் பிரித்த ஒரு நிகழ்வு என்னை மிகவும் பிரித்து போட்டுவிட்டது. அந்த நிகழ்வு…

என்னுடைய வாஸ்து அனுபவத்தில் ஏறத்தாழ 1000 –க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளில் குறைபாடு உள்ளவர்களை(மாற்று திறனாளிகள்) பார்த்து இருப்பேன். பேசி இருப்பேன். சராசரி மனிதனுக்கு இல்லாத வெற்றி பெற வேண்டும் என்கின்ற வெறி மாற்று திறனாளிகளுக்கு மிக அதிகமாக உள்ளதை உணர்ந்து இருக்கின்றேன். அப்படிப்பட்ட வெற்றி பெற வேண்டும் என்கின்ற உணர்வு உள்ள ஒரு ஒரு மாற்று திறனாளிக்கு உதவும் போது அந்த உதவிக்கான காரணமாக அந்த மாற்று திறனாளியின் உறவினர்கள் சொன்ன வார்த்தைகள் கீழே:-

நீ ஒரு மாற்று திறனாளி. உனக்கு உதவி செய்தால் ஆண்டாள் பி.சொக்கலிங்கத்திற்கு தான் நல்லது – காரணம் அவர் தான் சொல்லி இருக்கிறாரே “மாற்று திறனாளிகளுக்கு நிறைய உதவிகள் செய்பவர்களுக்கு நல்லது நடக்கும்” என்று. அந்த உறவினர்கள் சொன்னதில் பாதி சரி. பாதி தவறு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் ஒருவனை தனிமை சிறையில் அடைத்து, யாரிடமும் அவன் பேசவோ, யாரையும் அவன் பார்க்கவோ கூடாது என்கின்ற சூழ்நிலையில் அவனை இருக்க வைத்திருந்தால் அவன் மனம் எவ்வளவு வேதனைப்படுமோ அந்தளவிற்கு வேதனையை நெருப்புடன் சேர்த்து வாயில் போட்ட உணர்வு இந்த வார்த்தைகளை எதிர்பாராத விதமாக கேட்டவுடன். இந்த வலியின் வலி, கொடுத்தவர்களுக்கு தெரியாது; அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் மற்றும் தெரியும்.

எனக்கு ஏற்பட்ட இந்த வலிக்கு எது காரணம்?

காரணம் யார்?

காரணம் மற்றவர்களா?

காரணம் கடவுளா?

சற்று பொறுங்கள். சுடும் உண்மையை பின் பார்ப்போம்.

இது போல் எனக்குள் இருக்கும் கஷ்டங்கள் என பல நூறு விஷயங்களை அடுக்கி கொண்டே போகலாம். எல்லாவற்றையும்  சொல்லி பின் அதனை அலசி ஆராயாமல் மேற்சொன்ன இரண்டு விஷயங்களையே உதாரணமாக எடுத்துக்கொண்டு பார்த்தோமேயானால்

இந்த நிலைக்கு என்ன காரணம் சமுதாயமா, தனி மனிதர்களா, நம்மை படைத்த கடவுளா

என்று எழும்பும் கேள்விகளுக்கு பதில் தான் நம் வாழ்க்கையின் அடிப்படை. இதுபோன்ற நிலை ஆண்டாள் பி.சொக்கலிங்கத்திற்கு மட்டும் இல்லை –  ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஏற்படுவதுண்டு வெவ்வேறு பரிணாமங்களில் / நேரங்களில். ஆனால் ஏனோ நாம் சிந்திப்பதும் இல்லை. அலசி ஆராய்வதும் இல்லை. இதன் விடையை நாம் புரிந்து கொண்டால் என்றும் நமக்கு வெற்றி தான். நம் மனம் இன்ப, துன்ப நிலைகளை சமமாக எடுத்து கொள்ளும் பக்குவத்திற்கு வந்து விடும். “காரணமின்றி காரியமில்லை” என்பது புரிந்துவிடும். “மனம் அது செம்மையானால் மந்திரங்கள் தேவை இல்லை” என்பது தெரிந்து விடும்.

பஞ்சபூதங்களில் காற்று மட்டும் அசாத்திய குணம் கொண்டது.

காற்று மட்டும் அதிசயம் மிக்க அதிசயத்தை தன்னுள் அடக்கி உள்ளது.

காற்று மட்டும் ஒப்புகை இல்லா தனித்துவம் கொண்டது.

காற்று நீரோடு சேரும் போது நீர் குமிழியாகவும்,

காற்று நெருப்போடு சேரும் போது புகையாகவும்,

காற்று ஆகாயத்தோடு சேரும் போது இடி, மின்னலாகவும்,

காற்று மண்ணோடு சேரும் போது புழுதியாகவும்,

காற்று காற்றோடு சேரும் போது புயலாகவும் – மாறும் தன்மை கொண்டது.

காற்று தான் கடவுளாக இருந்து நமக்கு கற்பித்தது, கற்பித்தும் வருகின்றது. ஆனால் நாம் தான் இந்த முதல் பாடத்தையே சரியாக படிக்காமல், மெத்த படித்தவர்களாக நம்மை காண்பிக்க முற்பட்டு நிழலுடன் யுத்தம் செய்து நித்தம் போராடாமல் தோற்று கொண்டிருக்கின்றோம்.

எனக்கும், நமக்கும் ஏற்பட்ட / ஏற்படுகின்ற இது போன்ற பிரச்சினைகளுக்கு யார் காரணம்?

காற்று கற்பித்தது என்ன?

வாழ்க்கையை, வாழ்க்கையின் அர்த்தத்தை சற்று காற்றை உற்று பார்த்து உள் வாங்கிய பின் பார்க்கலாமா அடுத்த கடிதத்தில்?

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =