கடிதம் – 13 – காதல்

August 22, 2014 0 Comments

கடிதம்  13 –  காதல்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

இல்லாத வெற்றிடத்தை நிரப்ப இறைவனால் நேரடியாக படைக்கப்பட்டு பூமிக்கு வந்தவர்கள் – என்பது போல் ஒரு வாழ்க்கை ஒவ்வொரு காதலர்களுக்கும்….

உடல் ரீதியாக, மனரீதியாக என காதலர்களை இரண்டு வகையாக வகைப்படுத்தலாம்…

முதல் காரணம் பற்றி பேச தேவையேயில்லை….

மனரீதியாக ஒன்றி நான் என் துணையை காதல் மூலம் பெற்றெடுத்தேன் என்று சொல்பவர்களை பகுத்தாய்ந்து பார்த்தோமேயானால்

  1. பாசம் அதிகம் கிடைக்கப் பெற்றவர்களும்
  2. பாசத்தை துளி கூட கிடைக்கப் பெறாதவர்களும்
  3. ஒற்றை குழந்தையாக பிறந்தவர்களும்
  4. தனிமை விரும்பிகளும்          – என

நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம். இதில் காதலர்கள் எந்தப் பிரிவை சார்ந்தவர்கள் என்றாலும் பாதிக்கப்படுவது பெற்றோர்கள் மட்டுமே….

பெற்றோர்கள் தன் சொந்த குழந்தையை எத்தனை சிறப்பாக வளர்த்து இருந்தாலும்; உலகில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் கொடுத்து வளர்த்து இருந்தாலும்; தங்கள் தகுதிகேற்ப, சில இடங்களில் தங்கள் சுய தகுதியையும் மீறி படிக்க வைத்து சீராட்டி, பாராட்டி தூக்கி கொண்டாடி அக மகிழ்ந்து இருந்தாலும் தங்கள் குழந்தை காதல் வயப்பட்டு இருக்கின்றது என்கின்ற விஷயம் தெரிய வரும்போதே அவர்கள் 10 முறை சுடுகாட்டில் பிணமாக எரிக்கப்பட்ட உணர்வை அடைந்து விடுகிறார்கள். சில இடங்களில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறியும், பல இடங்களில் பெற்றோர்களின் அனுமதியுடனும் காதல் திருமணங்கள் நடைபெற்றாலும் இரண்டு தரப்பு பெற்றோர்களும் 100 முறை மரித்து, மறைந்து போய் இருந்தும் இல்லாத வாழ்க்கையை தலையில்லாத முண்டம் வாழ்வது போல் வாழ்ந்து கடைசியாக உடல் ரீதியாக மறைகிறார்கள் என்பது தான் எதார்த்த உண்மை….

ஒரே ஜாதியாக இருந்தாலும், வெவ்வேறு ஜாதியாக இருந்தாலும், வெவ்வேறு இனம், மதம் சார்ந்தவர்களாக இருந்தாலும் பெற்றோர்கள் நமக்காக படப்போகும் கஷ்டத்தை காதலை துவங்குவதற்கு முன் ஒவ்வொரு காதலர்களும் நினைத்து பார்க்க வேண்டும்…

என்னை பொறுத்தவரை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு நிமிடமாவது

காதலிக்கப்படாத பெண்களும் இல்லை…..

காதலிக்கப்படாத ஆண்களும் இல்லை…..

யாரும் எந்தக் காலத்திலும் இந்த விதிக்கு விதிவிலக்காக இருந்து இருக்க முடியவே முடியாது. பெரும்பாலோனர் வாழ்க்கையில் அது சில முறை அல்லது பல முறை வந்து போய் இருக்கலாம். என் வாழ்க்கையிலும் சில பெண்கள் திருமணத்திற்கு முன்பும், பின்பும் வந்ததுண்டு…. அந்த வகையில் என் சொந்த அனுபவத்தில் சில கருத்துக்கள் உங்கள் எல்லோர் பார்வைக்கும்:-

  1. பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் தள்ளுதலும், கொள்ளுதலும் தான் வாழ்க்கை என்பதை தான். இவ்வகை திருமணங்கள் நடைபெறும் போது பெற்றோர்கள் மனரீதியாக சந்தோஷமாக இருப்பார்கள் என்பதால் அந்த சந்தோஷமே இளம் கணவன், மனைவி – க்கு அடுத்த கட்டத்தை காண்பிக்கும். இருந்தாலும்  இதுபோன்ற திருமணங்களில் கணவர் சரியில்லாததால் தான் மாமியார் – மருமகள் சண்டை, ஸ்டவ் வெடிப்பு, விவாகரத்து, துர்மரணம், தனித்து வாழ்வு, மனகஷ்டம் என்பவை ஏற்படுகின்றது எனபது முக்கியமாக கவனத்தில் நிறுத்த வேண்டிய விஷயமாகும். ஒரு கணவனின் எதிர்பார்ப்பு உடல் ரீதியாக, மனரீதியாக பூர்த்தியாகாமல் போகின்ற போதும், அதிகமான அல்லது குறைவான எதிர்பார்ப்பும் தான் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களில் பல தோல்வி அடைவதற்கு காரணமாகும்.

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் :–

பெற்றோர்களால் ஜாதகம், சாதி, மதம் பார்த்து நடத்தக் கூடிய திருமணங்கள் நிறைய விவகாரம் ஆகி விவகாரத்தில் முடிவடைகின்றதே என என்னிடம் கேட்டால் கடுமையான யுத்த பூமியில் யுத்தங்களுக்கு நடுவே யுத்தத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் மடிவது எப்படி இயற்கையோ அதுபோல் பெரிய விஷயத்தை பற்றி பேசும்போது சிறிய சங்கடங்களை ஊதி பெரிது பண்ணாமல் தவிர்ப்போம்.

  1. பெற்றோர்கள் பார்த்து சொல்பவரை திருமணம் செய்யாமல் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுக்க கூடிய காதலர்களுக்கு நான் சொல்ல விரும்புவது:-

உங்கள் முடிவு 100% சரியானதாக இருக்கலாம். உங்களுக்கு 200% மகழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கலாம். உங்களுக்கு அருமையான பிள்ளைகள்  பிறக்கலாம். ஊர் மெச்சக் கூடிய அளவிற்கு பணமும், புகழும் கிடைக்கலாம். இராமபிரான் போன்ற கணவனோ, சீதா பிராட்டியார் போன்ற மனைவியோ கிடைக்கலாம். இது போன்ற இணை இவ்வுலகில் பார்க்க முடியாது – “Made for each other” Wills cigarette விளம்பரம் போல ஜோடி என ஒட்டுமொத்த உலகமே பாராட்டலாம். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் சந்தோஷமானது உங்கள் பெற்றோர்களை உயிருடன் மண்ணில் புதைத்த சமாதி மேல் தான் தொடங்குகிறது என்பதை நினைவில் கொள்ளவும். காதல் திருமணம் செய்தவர்கள் காதலித்தவர்களை விட தத்தமது பெற்றோர்களை எப்போதும் நன்கு பார்த்து கொள்ளுவது அவசியம். பெற்றோர்களிடம் மானசீகமாக மன்னிப்பு கேளுங்கள். அடிவயிற்றில் இருந்து கேட்கக் கூடிய மன்னிப்பாக அது இருக்க வேண்டும்.

உங்கள் ஜோடிக்கு எத்தனையோ பாராட்டுகள் கிடைத்தாலும், உங்கள் பெற்றோர்களே அதை கண்டு புளகாங்கிதப்பட்டாலும் ஓரத்தில் – நெஞ்சு ஓரத்தில், ஒரு இம்மியளவிற்கு ஒரு துளி கஷ்டமிருக்கும் அவர்களுக்கு கண்டிப்பாக….

அவர்களின் அந்த ஒரு துளி கஷ்டம் அதுபோல் ஓராயிரம் மடங்கு கஷ்டத்தை நமக்கு நிகழ்காலத்திலும், பிற்காலத்திலும் ஏதோ ஒரு வகையில் கொடுக்கவல்லது – அவர்கள் அதற்கு பிரியப்படாவிட்டாலும் கூட…..

நம் வாழ்க்கை முறையில் பெற்றோர், உற்றார், உறவினர்கள் இல்லாத யார் வேண்டுமானாலும் காதல் திருமணம் செய்து கொள்ளலாம். யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எல்லா சொந்தங்களும் அமையப் பெற்றவர்களின் காதல் திருமணங்கள் நல்ல முடிவாக இருக்கவும் முடியாது. நல்ல செயலாக கருதவும் முடியாது.

இந்த இடத்தில் பெற்ற தாயை கொன்றால் கூட பிராயசித்தம் உண்டு… செய்நன்றி கொன்றவர்களுக்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் மன்னிப்பும் கிடையாது; பிராயசித்தமும் கிடையாது என்று இராமர் சொல்லியதாக நான் படித்த விஷயத்தை பெற்றோரிடம் நன்றி மறந்த ஒவ்வொரு காதலர்களுக்கும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அதேபோல் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தங்கள் திருமணத்திற்கு பிறகு ஒரே ஒரு முறை தங்கள் மனைவியை அடித்து இருந்தால் கூட அந்தத் திருமணம் தோல்வி திருமணம் தான் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொண்டு காதல் மனைவியை நன்கு பார்த்துக் கொள்ளவும்.

  1. என்னை போன்று காதல் செய்து அப்பா / அம்மாவிற்கு என பரிதாபப்பட்டு, குடும்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி பெற்றோர் பார்த்த வரனை திருமணம் செய்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது:-

பெற்றோரை ஏமாற்றுவதை விட கொடிய பாவம் காதலித்தவர்களை ஏமாற்றுவது தான்….

இதற்கு என்ன தண்டனை என்பது தீர்மானிக்கவே முடியாத ஒன்று. உலகில் உள்ள அத்தனை கஷ்டங்களையும் ஒரே சமயத்தில், ஒருங்கே அனுபவித்தால் கூட ஒருவர் மற்றொருவருக்கு செய்த நம்பிக்கை துரோகித்திற்கு சரியான தண்டனையாக இருக்க முடியாது என்பதே என் கருத்து.

இந்த இடத்தில் பெற்றோரை ஏமாற்றும் காதலர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்பதையும் காதலர்கள் காதலுக்கு பின் ஒருவரை ஒருவர் ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் போது அந்த ஏமாற்றிய நபரின் குற்றத்திற்கு தண்டனையே இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பதையும் காதல் திருமணம் செய்தபிறகு மனைவியை துன்புறுத்துபவருக்கு, மனைவியை நிர்கதியாக ஆக்குபவருக்கு, தன்னை நம்பி வந்த பெண்ணை நிர்மூலமாக்குபவனுக்கு உலகம் இருக்கும்வரை திரும்ப, திரும்ப மனிதனாக பிறந்து துன்பப்பட வேண்டியது இருக்கும் என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

காதல் தோல்வியும் வேண்டாம்

காதல் வெற்றியும் வேண்டாம்

மொத்தத்தில் காதலே வேண்டாம் என்பது என் கருத்து.

  1. என்னை போன்று உண்மையான காதலியை ஏமாற்றியவர்களுக்கு:-

உண்மையான காதலை தோற்கடித்து ஏமாற்றியவர்கள் தயவு செய்து  நீங்கள் எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்தாலும் ஒரு நாளில் ஒரு முறையாவது உங்களால் ஏமாற்றப்பட்டவர் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனையாவது செய்யுங்கள் அல்லது ஒரு நாளில் ஒரு முறையாவது உங்களால் ஏமாற்றப்பட்டவரை நினைவுக்கு எடுத்து வர பழகுங்கள்.

என் காதலியை நான் பார்த்த போது என் காதலி அணிந்திருந்த உடையின் நிறமானது எனக்கு பிடித்த, எனக்கு பிடிக்கும் என்று அவளுக்கு மட்டும் தெரிந்த, எனக்கு பிடித்ததால் அவளுக்கும் ரொம்ப, ரொம்ப பிடித்து போன இராமர் நீலத்தில் தான்.

அந்த ஞாபகத்தில் என்னுடைய எல்லா நல்ல தருணங்களிலும், நீல நிற வண்ண சட்டை அணிந்து சந்தோஷப்பட்டு கொள்வேன்…. அப்பாவை காப்பாற்றினோம் என்ற சந்தோஷத்துடன்…..

 

வாழ்க வளமுடன்

என்றும் கண்ணீருடன்….

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =