#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தஞ்சாவூர்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தஞ்சாவூர்
மூலவர் : நீலமேகர், வீரநரசிம்மர், மணிக்குன்றர்
உற்சவர் : நாராயணர்
தாயார் : செங்கமலவல்லி, தஞ்சைநாயகி, அம்புஜவல்லி
தல விருட்சம் : மகிழம்
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
புராண பெயர் : தஞ்சமாபுரி, வெண்ணாற்றங்கரை
ஊர் : தஞ்சாவூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஒரே ஊரில் மூன்று பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் மூன்றுமே சாந்நித்தியம் நிறைந்த ஆலயங்களாகவும் புராதனைப் பெருமை கொண்ட கோயிலாகவும் திகழ்கின்றன. வீர நரசிங்கப் பெருமாள் கோயில், நீலமேகப் பெருமாள் கோயில், மணிக்குன்ற பெருமாள் கோயில் என அமைந்துள்ளன.
ஸ்தல வரலாறு :
முன்னொரு காலத்தில், பராசர முனிவர் இங்கே வந்து குடிலும் பர்ணசாலையும் அமைத்து தவம் மேற்கொண்டு வந்தார். தன் சீடர்களுக்கு உபதேசம், பர்ணசாலையில் தவம் என வாழ்ந்து வந்த நிலையில், அந்த வனப்பகுதியில் மூன்று அரக்கர்கள் இருந்து அட்டகாசம் செய்து வந்தனர். தஞ்சகன், தாண்டகன், தாரகன் என மூன்று அரக்கர்களின் அட்டூழியங்களை மக்களாலும் முனிவர் பெருமக்களாலும் தாங்கமுடியவில்லை இந்த வேளையில், அந்தப் பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அரக்கர்களின் கொடுஞ்செயல்கள் இன்னும் அதிகரித்தன. அமிர்த தீர்த்தக்கரையில் இருந்த பராசர முனிவரையும் துன்புறுத்தினார்கள். மக்களும் ஓடிவந்து முனிவரிடம் முறையிட்டார்கள். ‘எங்களைக் காப்பாற்றுங்கள்’ என கதறினார்கள். அனைவரின் நலனுக்காகவும் அரக்கர்களை அழிக்கவேண்டியும் பராசர முனிவர், மகாவிஷ்ணுவைப் பிரார்த்தித்தார். அங்கே, பிரத்யட்சமானார் திருமால். அசுரர்களை அழிக்க முனைந்தார். தஞ்சகாசுரன் கடும் போரிட்டான். யானையாக உருமாறினான். நான்கு திருக்கரங்களுடன் மகாவிஷ்ணுவாக வந்த திருமால், நரசிம்மமாக உருமாறி இரணியனை வதைத்து அழித்தது போல், தஞ்சகாசுரனை அழித்தொழித்தார் பெருமாள். உயிர் பிரியும் தருணத்தில் திருந்திய தஞ்சகாசுரன், ‘மன்னியுங்கள். தவறுணர்ந்தேன். இந்தப் பகுதி என் பெயரிலேயே அழைக்கும்படி வரம் தாருங்கள். மேலும் இந்த இடத்தில், மகாவிஷ்ணுவான தாங்கள் நரசிம்மராக இங்கேயே இருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்து வேண்டினான். அவனுடைய வேண்டுதலை ஏற்றார் மகாவிஷ்ணு. அதனால்தான் இந்த ஊர், தஞ்சாவூர் என்றானது என்கிறது ஸ்தல புராணம்.
தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகேயுள்ள வெண்ணாற்றங்கரையின் தென் கரையில் அருகருகே வரிசையாக மூன்று திருமால் கோயில்கள் கிழக்கு நோக்கி உள்ளன. 108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயில்கள் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்றவை. ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படும் இந்த மூன்று கோயில்களையும் சேர்த்தே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று திருமால்,மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரே தலமாகவே பாடல் பெற்றுள்ளன. இம்மூன்றும் ஏறத்தாழ அரை கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவுக்குள்ளேயே அமைந்துள்ளன. இத்தலத்துக்கு பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு.
1.மேலச் சிங்க பெருமாள் கோயில்
முதலாவதாக அமைந்திருப்பது மேலச்சிங்க பெருமாள் கோயில். கருவறையில் சிங்கப்பெருமாள் திருமேனி ஏறத்தாழ 6 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில், தாயார் இருவருடன் அமைந்துள்ளது. இத்தலத்து தாயார் தஞ்சை நாயகி என அழைக்கப்படுகிறார். இத்திருமேனிகளுக்கு முன்பாக நின்ற கோலத்தில் ஆழியும் சங்கும் ஏந்திய திருமால், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறைய செப்புத் திருமேனிகளாகக் காட்சி அளிக்கிறார். இவற்றில் ஒருவகைத் திருமேனிகள் சோழர் காலப் படைப்பாகத் திகழ்கிறது. மூலவராகத் திகழும் சிங்க பெருமாளும், தாயார் இருவரும் விசயநகரக் காலத்துக் கலை அமைதியோடு காணப்படுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்பெறும் தஞ்சை நாயக்கர்களின் சிற்பப் படைப்புகளை ஒத்தே இத்திருமேனிகள் உள்ளன. சிங்கப்பெருமாளான நரசிம்ம மூர்த்தியின் கருவறைக்குத் தென்புறம் உள்ள தாயார் சன்னதியும் கற்றளியாகவே அமைந்துள்ளது. இத்திருக்கோயில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
2.மணிக்குன்ற பெருமாள் கோயில்
மேலச் சிங்க பெருமாள் கோயிலுக்கு பின்புறம் அருகிலுள்ள மற்றொரு திருக்கோயில் மணிக்குன்ற பெருமாள் கோயில் என்கிற மாமணிக்கோயில். இக்கோயிலும் முன்னொரு காலத்தில் மேலவெளி ஊராட்சிக்கு உள்பட்ட களிமேடு கிராமத்தின் கிழக்கில் அமைந்திருந்ததாகவும், பிற்காலத்தில் வெண்ணாற்றங்கரைக்கு இடம்பெயர்ந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இக்கோயிலிலும் காமாட்சிபாய் சாகேப் திருப்பணிகள் செய்தார். இக்கோயில் கருவறையில் அமர்ந்த ஆழியும், சங்கும் ஏந்திய திருமாலும், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி இருவரும் மிகப்பெரிய திருவுருவங்களாக இடம்பெற்றுள்ளனர். இத்திருக்கோயிலைத்தான் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
3.நீலமேக பெருமாள் கோயில்
மாமணிக் கோயிலுக்கு பின்புறம் அமைந்திருக்கிறது நீலமேக பெருமாள் கோயில். இதில், அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி என்கிற உபய நாச்சியார்களுடன் நீலமேக பெருமாள் எழுந்தருளியுள்ளார். மற்ற கோயில்களில் எம்பெருமானின் இடது கால் சேவைதான் கிடைக்கும். ஆனால், இக்கோயிலில் இடது காலை மடித்து, வலது கால் சேவை தருகிறார். இது மிகவும் விசேஷமானது. அர்ச்சாவதாரமாகக் காட்சியளிக்கும் கருங்கல் திருமேனிகளே கருவறையை அலங்கரிக்கின்றன.
பெருமாளுக்கு அருகே பராசர மகரிஷியின் திருவுருவமும் உள்ளது. தாயாருக்கு செங்கமலவல்லி என்ற திருநாமத்துடன் தனிச் சன்னதி உண்டு. இத்திருக்கோயிலைத்தான் பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த தஞ்சை மாமணிக்கோயில் எனப் போற்றுகின்றனர்.
#கோயில் சிறப்புகள் :
• அக்காலத்தில் மணிமுத்தாறு ஆற்றின் கரையில் ஸ்ரீநீலமேகப் பெருமாள் ஆலயமும், காலிமேடு என்ற பகுதியில் ஸ்ரீமணிக்குன்றப் பெருமாள் ஆலயமும், சிங்கப் பெருமாள் குளம் என்ற குளத்தின் அருகில் ஸ்ரீநரசிங்கப் பெருமாள் ஆலயமும் அமைந்திருந்தன. இவை நாளடைவில் பழுது பட்டு பொலிவிழந்ததால், தஞ்சை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தற்போதுள்ள வெண்ணாற்றங்கரையில், அருகருகே மூன்று புதிய ஆலயங்கள் எழுப்பப்பட்டு மூலமூர்த்திகள் புனர் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.
• ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த ஆலயங்கள் திவ்ய தேசங்கள் என்று போற்றப்படுகின்றன. இந்த மூன்று ஆலயங்களையும் ‘திருத்தஞ்சை மாமணிக் கோயில்’ என்ற பெயரில் ஒரே திவ்ய தேசமாக ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
• சுமார் 200 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள இந்த மூன்று ஆலயங்களிலுமே உற்சவர் ஸ்ரீநாராயணன் என்ற திருநாமத்தோடு திகழ்கிறார்.
• திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தபோது 108 திவ்ய தேசப் பெருமாள்களும் அவருக்கு வைகாசி மாதத் திருவோண நட்சத்திர நாளன்று காட்சி தந்ததாக ஓர் ஐதீகம் உண்டு. அதன்படி இத்தலத்தில் வைகாசி திருவோணத்தன்று கருடசேவைகள் நடைபெறுகின்றன.
• வைகாசி மாதத் திருவோண நாளில் தஞ்சாவூரில் நடைபெறும் 23 ஆலய கருடசேவை, தனிச் சிறப்பு பெற்றது. இதுபோன்ற சேவைகளில் அதிக எண்ணிக்கையில் கருட வாகனங்களில் பெருமாள்கள் சேவை சாதிப்பது குறிப்பிடத்தக்கது.
• சிங்கப்பெருமாள் கோயிலில் வீர நரசிம்மர், முன் மண்டபத்தில் யோக நரசிம்மர், நீலமேகப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர், தாயார் சன்னதியில் உள்ள தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என இத்தலத்தில் பஞ்ச நரசிம்மர்கள் காட்சி தருகின்றனர்.
• பொதுவாக நரசிம்மர் தனித்து இருப்பார். மேலச் சிங்கபெருமாள் கோயிலில் மட்டுமே கருவறையில் வீர நரசிம்மர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூலவருக்கு தைலக்காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. இங்கு உற்சவருக்கு மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
• நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி, நீலமேகப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் அவருக்கு வலப்புறத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறார். இவரை “வலவந்தை நரசிம்மர்’ என்கின்றனர். அசுரனை அழித்த நரசிம்மர், இதயம் கோபத்தில் துடித்துக்கொண்டிருக்க இத்தலத்தில் அமர்ந்தார். கோபம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதில்லை. எனவே அவள் நரசிம்மருக்கு வலப்புறத்தில் அமர்ந்துகொண்டாள். கோபப்படும் குணம் கொண்டவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்காது என்பதை இந்த வடிவம் நமக்கு உணர்த்துகிறது.
• திருமணங்கொள்ளையில் மகாவிஷ்ணுவிடம் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டாவதாக மங்களாசாசனம் செய்துள்ளார்.
• நீலமேக பெருமாள் கோயில் பராசர முனிவருக்கு நேரில் காட்சி கொடுத்த இடம்.
• மாமணிக் கோயில் மார்க்கண்டேய முனிவருக்கு பகவான் காட்சி கொடுத்த தலம்
• ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் பிரதோஷ காலத்தில் வீர நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்து வந்தால் எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பது ஐதீகம். நரசிம்ம ஜெயந்தி பிரதோஷ காலத்தில் நிகழ்ந்தது. எனவே பிரதோஷ காலத்தில் வீர நரசிம்ம வழிபாடு நடைபெறுகிறது.
• வீரநரசிம்மர் கோயிலில் சக்கரத்தில் மகாவிஷ்ணுவே சக்கரத்தாழ்வாராக இருக்கிறார். இவர் வலப்புறத்தில் இருக்கும் யானையின் மீது கை வைத்து தடவிக்கொடுத்தபடி இருக்க, இடப்புறத்தில் ஒருவர் சுவாமியை வணங்கியது போல சிலை அமைப்பு இருக்கிறது. இந்த வடிவம் யானை வடிவம் எடுத்த தஞ்சகாசுரனையும், அவன் திருந்தி மகாவிஷ்ணுவை வணங்குவதையும் குறிப்பதாக சொல்கிறார்கள். மனதில் தீய குணங்களுடன் இருப்பவர்கள் இவரை வணங்கினால் மன்னிப்பு பெறலாம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. இவருக்கு பின்புறத்தில் நரசிம்மர் யோகபட்டையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் இரண்யகசிபு, பிரகலாதன் ஆகியோர் இருக்கின்றனர். இந்த சக்கரத்தாழ்வார் வடிவ பெருமாளின் தரிசனம் மிகவும் விசேஷமானது.
• நீலமேகப்பெருமாள் உற்சவராக கையில் செங்கோல் ஏந்தியபடியும், உற்சவர் தாயார் அக்னி கிரீடம் அணிந்து கொண்டு சாந்தமான கோலத்தில் காட்சி தருவதும் சிறப்பு. இவரது கருவறையில் பராசரர் சுவாமியை வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.
• ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு பார்த்தபடி இருக்கிறார். கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி ஆகிய இருவரையும் வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
திருவிழா:
பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில் மூன்று பெருமாள்களுக்கும் தொடர்ந்து பிரம்மோற்ஸவங்கள் நடக்கிறது.
வைகாசியில் 18 கருடசேவை திருவிழா விசேஷம்.
திறக்கும் நேரம்:
வீரநரசிம்ம பெருமாள் கோயில் காலை 7 – 12 மணி, மாலை 5 – 8.30 மணி வரையில் திறந்திருக்கும். மற்ற இரண்டு கோயில்களுக்கு செல்ல இங்கிருந்து அர்ச்சகரை அழைத்துச் செல்லவேண்டும்.
முகவரி:
அருள்மிகு நீலமேகப்பெருமாள் கோயில் (மாமணிக்கோயில்),
வெண்ணாற்றங்கரை
தஞ்சாவூர் – 613 003.
போன்:
+91- 4362 – 223 384.
அமைவிடம் :
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணாற்றங்கரையில் இக்கோயில்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், திட்டை, திருவையாறு வழித்தடப் பேருந்துகளில் ஏறி வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில் எனக் கூறி இறங்கலாம்.