#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பச்சைமலை

September 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பச்சைமலை
232.#அருள்மிகு_சுப்பிரமணிய_சுவாமி_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : சுப்பிரமணிய சுவாமி
அம்மன் : வள்ளி தெய்வயானை
தல விருட்சம் : கடம்பம்
தீர்த்தம் : சரவணதீர்த்தம்
ஊர் : பச்சைமலை
மாவட்டம் : ஈரோடு
ஸ்தல வரலாறு:
வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்து அருள்பாலிக்கும் குழந்தை வடிவான இளம் குமரன். துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்கரம் ஸ்தாபித்தால் மலையும் தெய்வமும் சிறப்பு பெற்றன. துர்வாச முனிவர் கோபமே உருவான சிறந்த தவசீலர். பொதிகை மலைக்குச் சென்று திரும்பும் வழியில் குன்னத்தூர் என்னும் ஊரை வந்தடைந்தார். அங்குள்ள சிவன்கோயிலிற்கு சென்று தரிசித்து விட்டு, தன் ஞான சிருஷ்டியால் தினமும் சிவபூஜை செய்ய உகந்த இடம் யாது எனக் கண்டார். அது அரசமரமும் நாக புற்றுக் கண்ணும் அமைந்த மொச்சூர் என்ற தலமாகும். தம் தவவலிமையால் பூஜைப் பொருட்களை வரவழைத்தார். இடியுடன் கூடிய மழையை பெய்விக்கச் செய்து சிறப்பான ஒரு சிவ பூஜையைச் செய்தார். குறை தீர்க்கும் குமரவேல் இல்லையே என வருந்தினார். அப்போது, முனிவரே உமது சிவபூஜையால் மகிழ்ந்தோம். எங்கள் இளைய குமாரன் இங்கிருந்து அரை காத தூரத்தில் மரகதவள்ளி என்ற தன் தாயின் நிறம் கொண்ட குன்றின் மேல் அருள்கிறார். நீ அந்த மரகத கிரிக்குச் சென்று மேற்கு நோக்கி உள்ள இளம் இமரக் கடவுளைக் கண்டு தொழுது உனது பெயரால் ஒரு சக்கரம் ஸ்தாபித்து பூஜிப்பாயாக என வானில் இருந்து அசரீரி குரல் கேட்டது. முனிவர் அடைந்த மகிழ்ச்சிக்க எல்லையே இல்லை. அதன்படியே முனிவர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று மானசீகமாக பூஜை செய்தார். பின் இறைவனை மனதில் இருத்தி தவம் மேற்கொண்டார்.
நாக வடிவில் இறைவன் முனிவர் முன் தோன்றி, உமக்கு யாது வரம் வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு முனிவர், இறைவா நான் பூஜித்த இக்குன்று மரகதகிரி எனப் பெயர் பெற வேண்டும். தாங்கள் இளம் குமரனாக குழந்தை வடிவில் எழுந்தருளி அடியார்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும் நான் ஸ்தாபித்த சக்கரம் என்றும் பிரகாசமாக இருக்க வேண்டும். மந்திரம் எந்திரம், மூர்த்தி, சானித்யம் சூரிய சந்திரன் உள்ளவரை இம்மலை சானித்யமாய் விளங்க வரமளிக்க வேண்டும் என வேண்டினார். அவ்வாறே ஆகுக. கலியுகத்திலும் இம்மலையில் பல திருவிளையாடல்கள் செய்து அடியார் தம் குறைகளை தீர்த்தருள அனுக்கிரகம் செய்வோம் எனக்கூறி நாகம் மறைந்தது. முருகன் ஒருவனையே தன் இஷ்ட தெய்வமாக வழிபடும் அடியார் ஒருவர் 24.7.54 அன்று இளங்குமரனை வணங்கிக் கொண்டிருந்தார். அப்போது கருவறையில் ஒரு ஜோதி தோன்றியது. நான் பல காலம் இங்கு தனிமையில் வாடிக்கொண்டிருக்கிறேன். எத்தனையோ வசதி படைத்தவர்கள் இவ்வூரில் இருந்தாலும் என்னைக் கவனிக்க ஆள் இல்லையே. இன்று முதல் என்னைக் கவனிக்க வேண்டியது உன் பொறுப்பு என இளங்குமரன் இட்ட ஆணையை மானசீக மாக உணர்ந்து தொடரப்பட்ட ஒரு கால பூஜை படிப்படியாக உயர்ந்து தினமும் ஆறுகால பூஜை நடக்கும் அளவிற்கு வந்தது.
பச்சைமலை – பெயர்க்காரணம்
பலரும் நினைப்பது போல பச்சைமலை என்று இம்மலை பெயர் பெற காரணம் மரங்களோ, செடிகளோ அல்ல. பழைய படங்களை புரட்டினால் பச்சைமலையில் அவ்வளவாக மரங்கள் இல்லாமல் பாறைகளும் கற்களுமாக இருப்பதையே காண முடியும். இங்கு “பச்சை” என்பது நீரை குறிக்கிறது. இங்குள்ள மூலவருக்கு நேர் கீழாக ஒரு நீரூற்று இருப்பதாக நம்பப்படுகிறது. இது சமீப காலத்தில் நிரூபானம் ஆனது ஒரு சுவையான நிகழ்ச்சியின் மூலம் அறியலாம். வருடம் 2000 க்கு முன்பு பச்சைமலைக்கு நீர் மலை அடிவாரத்தில் இருந்து தான் கொண்டு செல்லப்படும். அப்பொழுது ஏற்பட்ட வறட்சியில் கிணறுகள் வற்றிவிட்டன. அப்பொழுது மலைக்கு மேலே ஆழ்குழாய் கிணறு அமைத்தல் பற்றிய திட்டம் உருவானது. மலை அடிவாரத்தில் தண்ணீர் இல்லாத சமயம் மலைக்கு மேலே தண்ணீர் இருக்க முடியாது என்பதால், மிகுந்த சந்தேகத்தோடு தான் ஆழ்குழாய் தோண்டப்பட்டது. அன்று சிறு ஆழத்திலேயே மிகவும் வேகமாகவும், உயரமாகவும் நீர் வெளியேறியதை அருகிலிருந்தோர் இன்றும் பரவசத்தோடு நினைவு கூறுகின்றனர். இதனால், பச்சைமலையில் பயன்படுத்தும் நீர் அனைத்தையுமே நாம் தீர்த்தமாக கொள்ளலாம்.
கோயில் சிறப்புகள்:
•மலைமீது செல்ல மலைப்பாதையும் 180 படிகள் கொண்ட படிப்பாதையும் உள்ளன. படிப்பாதை முடிவில் 40 அடி உயரமுள்ள திருச்செந்தூர் முருகனின் ஞானத் திருக்கோலம் தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படி அமைந்திருப்பது சிறப்பு.
•மலைமீது 100 அடியில் சுவையான நீர் ஊற்று உள்ளது. மிகவும் குளிர்ச்சி பொருந்திய மலை.
•மூலஸ்தானத்தில் இளங்குமரனாக ஞானப்பழமாக மேற்குநோக்கி சொர்ண பந்த பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். வலக்கையில் தண்டமும் இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியும் சக்தி வேலுடனும் சேவற்கொடியுடனும் கலியுக தெய்வமாக சுப்பிரமணிய சுவாமி என்ற திருநாமத்தில் விளங்குகின்றார்.
•அர்த்த மண்டபத்தின் ஒரு புறம் ஆறுமுகமும் பன்னிரு திருக்கரங்களுடன் வள்ளி தெய்வயானை சமேதரராய் அருள்கின்றார். மறுபுறம் கல்யாண சுப்ரமணியராய் வள்ளி தெய்வயானையுடன் மணக்கோலத்தில் வீற்றிருக்கின்றார். இவை இரண்டும் உற்சவ மூர்த்திகள் ஆகும்.
•ஒரு சமயம் பங்குனி உத்திர திருவிழாவின் போது அர்ச்சனையுடன் ஹோமமும் செய்தனர். அப்போது வேதங்களை ஓதிக்கொண்டிருந்த அர்ச்சகர் தீடிரென மயங்கி விழுந்தார். மயங்கிய விபரத்தைக் கேட்டபோது கருவறையில் மந்திர சக்தி உக்கிரமாக இருப்பதால் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறினார். அன்று தொட்டு இன்று வரை இதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
•கடம்பனின் இஷ்ட மலரைக் கொண்ட கடம்பத்தை தல விருட்சமாகவும், தீர்த்தமாக சரவண தீர்த்ததையும் கொண்டு விளங்குகிறது இத்தலம். (தற்போது சுனை வற்றிவிட்டது)
•பழநிமலையில் மூலவருக்கு அமைந்துள்ளதைப் போன்றே சொர்ண பந்தனம் செய்விக்கப்பட்டுள்ளது. பழநி மலையில் நடப்பதைப் போன்றே இங்கும் காலை, மாலை நேரங்களில் இராக்கால மகா அபிஷேகம் நடைபெறுகின்றன.
•திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருப்பது போல இரண்டு மயில் வாகனங்கள் அமைந்துள்ளன.
•அக்னி நட்சத்திரத்தின் போது மரகதீஸ்வரருக்கு தாராபிஷேகமும், 108 லிட்டர் பாலாபிஷேகமும் செய்யப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் நீடிக்கும் ருத்ராபிஷேகம் 11 முறை ஜெபிக்கப்படுகிறது. இத்தலத்தில் 7 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
•பச்சைமலையில் பிரதான உற்சவராக ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஷண்முகர் உள்ளார். ஆறுமுகம் கொண்ட முருகனின் ரூபத்தையே ஷண்முகர் என்று அழைக்கிறோம். பிரதி ஷஷ்டி, கிருத்திகை மற்றும் விசாக தினத்தன்று ஷன்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஷன்முகார்ச்சனை செய்யப்படுகிறது. கந்தர் சஷ்டியின் பொது ஆறு நாட்கள் தொடர்ந்து ஷன்முகார்ச்சனை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
•பங்குனி உத்திர கல்யாண உற்சவத்தின் போது சிவப்பு சாத்தி உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஷண்முகர் திருசெந்தூரை போலவே நடராஜராகவும் காட்சி அளிப்பார். அன்றைய தினம் இரவு வெள்ளை சாத்தி உற்சவமும், மறுநாள் பங்குனி உத்திரத்தன்று பச்சை சாத்தி உற்சவமும் நடைபெறும். முருகன் தானே சிவன், பிரம்மா , விஷ்ணுவாகத் திகழ்வதை உணர்த்தவே இவ்வலங்காரங்கள் செய்யப்படுகின்றது. வருடத்தில் ஒரு முறை மட்டுமே மலர் பல்லக்கில் நகர் வலம் வருகிறார் ஷண்முகர்.
•பச்சைமலை கோவிலில் எழு கால பூஜைகள் செய்யப்படுகிறது. காலை பதினொரு மணியளவில் ஒரு அபிஷேகமும், மாலை ஆறு மணியளவில் ஒரு அபிஷேகமும் தினமும் செய்யப்படுகிறது. மாலை ஆறு முப்பது மணியளவில் தங்க மயில் புறப்பாடு நடைபெறுகிறது. தங்க மயில் மீது பவனி செல்லும் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி பிறகு தங்கத்தேரில் எழுந்தருளுவார்.
•இறுதியாக மாலை எழு மணியளவில் நடைபெறும் அர்த்தஜாம பூஜை என்கிற இராக்கால பூஜை, பழனியை போன்றே மிகவும் சிறப்பாகச் செய்யப்படுகிறது. இறைவனாகிய பாலமுருகனுக்கு வெள்ளை ஆடை சாற்றி மலர்களால் அலங்காரம் செய்யபடும். அலங்கார தீபாராதனை முடிந்தவுடன் தமிழ் வேதங்களாகிய பன்னிரு திருமுறை உள்ளடக்கிய பஞ்சபுராணம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை,கந்தர் அநுபூதி,கந்தர் அலங்காரம், அபிராமி அந்தாதி, பிள்ளை தமிழ் ஆகிய நூல்களில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் பாடப்படும். அப்பொழுது சிவசாரியார்களுடன் சேர்ந்து பக்தர்களும் பாட அனுமதிக்கப்படுவார்கள். இறுதியாக கல்யாண சுப்ரமணியர் மற்றும் பைரவர் தீபாராதனை முடிந்து கோவில் சாத்தப்படுகிறது.
•பச்சைமலை பவளமலை எங்கள் மலை நாடு என்ற வாசகத்திற்கேற்ப இவ்விருமலை முருகன் கோவில்களும் இப்பகுதி மக்களால் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவிழா:
இத்தலத்தில் முருகனுக்குகந்த விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தை மற்றும் ஆடிக் கிருத்திகை நாட்களில் சத்ரு சம்ஹார ஹோமம்,
முருகனின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று லட்சார்ச்சனை, பவுர்ணமி அன்று கல்யாண சுப்ரமணியசுவாமி தம் தேவியருடன் திருவீதி உலாவாக கிரிவலம் ஆகியவை இத்தலத்தின் சிறப்பு நிகழ்வுகள்.
வருட திருவிழாக்களான தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தர் சஷ்டி (சூரசம்ஹாரம்) ஆகியவை முக்கிய விழாக்களாகும்.
ஆண்டு தோறும் பங்குனி உத்திரதேர் திருவிழா ஏழு நாட்கள் ஏழு விதமான வாகனப் புறப்பாட்டுடனும் காவடி அபிஷேகத்துடனும் நடந்து வருகின்றன.
தைப்பூசத்தின்போது சுற்றுவட்டார ஊர்களிலிருந்து காவடிகள் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தும் காட்சி கண் கொள்ளாக் காட்சி ஆகும்.
ஐப்பசி மாதத்தில் வரும் கந்தர் சஷ்டி விழா இத்தலத்தின் தலையாய விழாவாகும். வாரியார் சுவாமிகள் இத்தலத்திற்கு வருகை புரிந்து முக்கிய திருப்பணி ஆலோசனைகளை வழங்கி உள்ளார். மேலும் இக்குமரன் வாரியார் சுவாமிகளின் இஷ்ட தெய்வமாவார். காலம் காலமாக நம் முன்னோர்களால் வழங்கப்பட்டுவந்த சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதன் உட்கருத்தான சஷ்டி திதியில் முருகனை வேண்டி நோன்பிருந்தால் கருப்பையில் பிள்ளை உண்டாகும் என்பதை விளக்கமாக புரியும்படி அடியார்களுக்குச் சொல்லியவர் வாரியார் சுவாமிகள் தான். எங்கெல்லாம் அவர் சொற்பொழிவு ஆற்றுகிறாறோ அங்கெல்லாம் இந்தக் கருத்தைத் தெரிவிப்பார். அவ்வாறே இத்தலத்திலும் சொல்லி இருக்கின்றார்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
பச்சைமலை,
ஈரோடு.
போன்:
+91 4285- 222125
அமைவிடம்:
கோபி நகர் பேருந்து நிலையத்தில் 1 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆட்டோ/ டாக்ஸி மூலம் கோயிலை அடையலாம்.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #பச்சைமலை #பச்சைமலைமுருகன் #கோபிசெட்டிபாளையம் #பச்சைமலைமுருகன்கோயில் #Pachaimalai #pachamalaimurugan #Erode #மரகதகிரி #சுப்பிரமணியசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =